×

தந்தை பெரியார் குறித்து அவதூறு பேச்சு உரிய ஆதாரம் கொடுக்கவில்லை என்றால் சீமான் எந்த இடத்திலும் நுழைய முடியாது: கோவை ராமகிருஷ்ணன் எச்சரிக்கை; சீமான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: தந்தை பெரியார் குறித்து உண்மைக்கு மாறாக அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், உரிய ஆதாரத்தை கொடுக்கவில்லை என்றால், அவர் எந்த இடத்திலும் நுழைய விட மாட்டோம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தந்தை பெரியார் பேசியதாக சில சொற்களை கூறினார். இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

பெண்களை இழிவாக பெரியார் பேசியதாக கூறியதற்கு சீமான் உரிய ஆதாரங்களை வெளியிட வேண்டும். இல்லை என்றால் நான் சீமான் வீட்டிற்கு நேரில் வந்து ஆதாரத்தை கேட்பேன் என்று கூறியிருந்தார். இதையடுத்து சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து திட்டமிட்டப்படி தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை சின்ன நீலாங்கரையில் உள்ள நாம் தமிழகர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் அருகே ஒன்று கூடினர்.

அதேநேரம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்களும் அப்பகுதியில் ஒன்று கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.கோவை ராமகிருஷ்ணன் சீமான் வீட்டை நோக்கி ஆதாரவாளர்களுடன் கோஷம் எழுப்பிக் கொண்டு சந்திப்பு சாலை வழியாக உள்ளே செல்ல முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சீமான் வீட்டை முற்றுகைவிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரை தடுப்புகள் அமைத்து வழிமறித்து கைது செய்தனர்.

அப்போது கோவை ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசியதாவது: தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிற சீமான், பெரியாரை பெரியார் என்று பெயர் சூட்டிய பெண்களை இழிவுபடுத்தி சீமான் பேசி இருக்கிறார்.இப்படி தவறான செய்திகளை பரப்பி வருகிறார். சீமான் தற்போது புதுச்சேரியில் இருப்பதாக அறிகிறோம். புதுச்சேரியிலும் எங்கள் அமைப்பு ஆதாரத்தை கேட்க இருக்கிறார்கள். சீமான் பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை அவர் கொடுக்கும் வரைக்கும் அவர் எந்த இடத்திலும் நுழைய விடமாட்டோம் என்றார். இதற்கிடையே, சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாட்டில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைநகர் சென்னை மக்கள் இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் சிவக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் தினகரன் உள்ளிட்டோர் நேற்று காலை எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

* சீமான் வீட்டிற்கு வந்த கார் கண்ணாடி உடைப்பு
பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று காலை, சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் அருகே ஒன்று கூடினர். அப்போது நாம் தமிழர் கட்சியின் கொடியுடன் ஒரு கார், சீமான் வீட்டிற்கு சென்றது. இதை பார்த்து போராட்டம் நடத்த வந்தவர்கள் வழிமறித்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி காரை சீமான் வீட்டிற்கு செல்ல அனுமதித்தனர். திடீரென போராட்டக்காரர்கள் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதுதொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 24 பேர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

The post தந்தை பெரியார் குறித்து அவதூறு பேச்சு உரிய ஆதாரம் கொடுக்கவில்லை என்றால் சீமான் எந்த இடத்திலும் நுழைய முடியாது: கோவை ராமகிருஷ்ணன் எச்சரிக்கை; சீமான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Seeman ,Periyar ,Coimbatore Ramakrishnan ,Chennai ,Naam Tamil Party ,Dravidar Kazhagam ,General ,Thaay Periyar… ,
× RELATED பெரியார் குறித்து அவதூறு: சீமானுக்கு திருமாவளவன் கண்டனம்