×

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் லாரி மோதியதில் அப்பளம்போல் நொறுங்கிய காருக்குள் சிக்கிய வாலிபர்: ஒருமணி நேரம் போராடி மீட்பு

தாம்பரம், ஜன. 9: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி சொகுசு கார் மீது பயங்கராக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் இருந்து ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு கார் டிரைவர் மீட்கப்பட்டார். குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி ஜிஎஸ்டி சாலையில் நேற்று அதிகாலை சுமார் 3.45 மணியளவில் டாரஸ் லாரி ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த லாரி ஜிஎஸ்டி சாலை – காந்தி சாலை சந்திப்பு சிக்னலில் திரும்பி காந்தி சாலை வழியாக பழந்தண்டலம் பகுதிக்கு செல்ல முயன்றது.

அப்போது சென்னை விமான நிலையம் நோக்கி ஜிஎஸ்டி சாலையில் வேகமாக வந்த சொகுசு கார் மீது லாரி அதிவேகமாக மோதியது. இதில், பலத்த சத்தத்துடன் அந்த கார் சில மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்தவர் காரில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் காவல் நிலைய போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு படையினர் அங்கு வந்து காரில் சிக்கி இருந்த நபரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனம் உதவியுடன் காரில் நசுங்கி இருந்த பகுதிகளை சரி செய்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி காயங்களுடன் சிக்கி இருந்த நபரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் காரை ஓட்டி வந்த நபர் புதுச்சேரி பகுதியை சேர்ந்த லட்சுமிகாந்தன் (35) என்பதும், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவரது உறவினரை அழைத்துச் செல்வதற்காக சொகுசு காரில் புதுச்சேரியில் இருந்து சென்னை விமான நிலையம் நோக்கி வந்தபோது தாம்பரத்தில் விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது. கும்பகோணம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் இளஞ்செழியன் (39) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்்த விபத்தினால் தாம்பரம் – பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் லாரி மோதியதில் அப்பளம்போல் நொறுங்கிய காருக்குள் சிக்கிய வாலிபர்: ஒருமணி நேரம் போராடி மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram GST Road ,Tambaram ,Taurus ,
× RELATED புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து...