செம்பனார்கோயில், ஜன.7: நாம் வருடம் முழுக்க எத்தனையோ பண்டிகைகளை கொண்டாடினாலும், நமது வாழ்வியலோடு கலந்த ஒரு இனிய நாளாகவும், தமிழர்களுக்கே உரிய திருநாளாகவும் இருப்பது பொங்கல் திருநாளே. இந்த பொங்கல் பண்டிகைக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது செங்கரும்பு ஆகும். அந்த வகையில் செம்பனார்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கரும்பு சாகுபடி செய்தனர். அதன் பின்னர் விவசாயிகள் சாகுபடி வயலை பராமரித்து, அதன் பயனாக செங்கரும்புகள் அறுவடைக்கு தயாரானது. இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் செங்கரும்புகளை, விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இதுகுறித்து செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடப்பு ஆண்டு சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் செங்கரும்பு சாகுபடி செய்தோம்.
பொதுவாக கரும்பு பயிரை மணல் பாங்கான பொன்செய் நிலத்தில் தான் சாகுபடி செய்வது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் செங்கரும்புகளை அறுவடை செய்து வருகிறோம். இந்த செங்கரும்புகள் கட்டுகளாக கட்டப்பட்டு விற்பனை செய்து வருகிறோம். தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், அதனை பொருட்படுத்தாமல் செங்கரும்புகள் அறுவடை செய்து வருகிறோம். அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை என்பதால் விரைந்து அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளோம். செங்கரும்பு சாகுபடி செய்ய ஏக்கருக்கு சுமார் ரூ.60 ஆயிரம் வரை செலவாகும். எனவே விவசாயிகள் லாபம் பெறும் வகையில் செங்கரும்புக்கு உரிய விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம். அறுவடை முடிந்த பின்னர் நிலக்கடலை, மரவள்ளி கிழங்கு, மிளகாய், கொத்தவரங்காய் போன்ற பயிர்களை சாகுபடி செய்வோம் என்றனர்.
The post செம்பனார்கோயில் பகுதியில் செங்கரும்புகள் அறுவடை செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.