புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேஜ கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. என்ஆர் காங்கிரசில் 3 பேரும், பாஜவில் 2 பேரும் அமைச்சர்களாக உள்ளனர். இதனிடையே அமைச்சர், வாரியத் தலைவர் பதவியை எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றமடைந்த பாஜ எம்எல்ஏக்கள் மட்டுமின்றி ஆதரவு சுயேச்சைகள் சிலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுவும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்த பிறகு அமைச்சரவை மாற்றம் வலியுறுத்தி போர்க்கொடி தூக்கியுள்ளனர். இருப்பினும் ஒன்றிய, மாநில ஆளும் தரப்பு எந்தவித இறுதி முடிவும் எடுக்காமல் அவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக உள்ள சாய் ஜெ சரவணன்குமார் மாற்றப்பட இருப்பதாகவும், அவருக்கு பாஜ மாநில தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் சில தினங்களாக தகவல் பரவி வருகிறது. இதேபோல் அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவுகின்றன. கடந்த வாரம் புதுச்சேரி வந்திருந்த பாஜ மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா, முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மாநில தேர்தல் பொறுப்பாளருமான ராஜூ சந்திரசேகர் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
The post புதுச்சேரி அமைச்சரவை மாற்றமா? appeared first on Dinakaran.