×

பாஜ மாநில புதிய தலைவர் விரைவில் அறிவிப்பு புதுச்சேரி அமைச்சரவையில் மாற்றம்: மேலிட பொறுப்பாளர் சுரானா பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தேஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் பாஜவுக்கு சபாநாயகர், இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாரிய தலைவர் பதவி, சுழற்சி முறையில் அமைச்சர் பதவி கோரி அதிருப்தி எம்எல்ஏக்கள், பாஜ ஆதரவு சுயேச்சைகள் போர்க்கொடி உயர்த்தி வந்தனர். அவர்களை மேலிடபொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா அவ்வப்போது சமாதானப்படுத்தி வந்தார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மீண்டும் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் சார்லஸ் தலைமையில் தனி அணியாக பாஜ மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் 6 பேர் செயல்பட ஆரம்பித்தனர். இது தேர்தலில் பாஜவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என தலைமை கருதியது. எனவே இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முடிவுசெய்தது. இதற்கிடையே புதுச்சேரியில் பாஜவுக்கான அமைப்பு தேர்தல் கடந்த 6ம் தேதி முதல் நடந்து வருகிறது. தொகுதி, நகர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து மாவட்ட, மாநில தலைவர் குறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன், அருள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளிடம் மாநில தலைவர் நியமனம் குறித்து கருத்துகளை கேட்டறிந்து வருகின்றனர். மாநில தலைவர் பதவிக்கு எம்எல்ஏக்கள் ராமலிங்கம், அசோக்பாபு, தங்க. விக்ரமன், அமைச்சர்கள் சாய்.ஜெ. சரவணன்குமார், நமச்சிவாயம் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யுமாறு நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அமைச்சர்களில் ஒருவர் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் பட்சத்தில், ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். எனவே காலியாகும் அமைச்சர் பதவி கொடுத்து அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த பாஜ தலைமை முடிவு செய்துள்ளது. இதனால் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே பாஜ மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, எம்எல்ஏக்கள் ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோர் நேற்று புதுச்சேரி- கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் இல்லத்தில் புதுச்சேரி கிறிஸ்தவ முதன்மை குரு குழந்தைசாமியை சந்தித்து பேசினர்.

பின்னர் வெளியே வந்த பாஜ மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கூறியதாவது: பாஜவில் மண்டல், பூத், மாவட்டம், மாநிலம் தேசிய தலைவர் வரை தேர்தல் நடந்து வருகிறது. அமைச்சரவை மாற்றம் இருக்கலாம். இதுதொடர்பாக தலைமை ஆலோசித்து வருகிறது. பாஜ எம்எல்ஏக்கள் யாரும் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவில்லை.

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்தவர்கள் சுயேச்சைகள்தான். புதுச்சேரி மாநிலத்துக்கு புதிய தலைவர் ஒரு வாரத்துக்குள் அறிவிக்கப்படுவார். இவ்வாறு அவர் கூறினார். பாஜ மேலிட பார்வையாளரின் இந்த தகவல் மூலம் பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதும், அமைச்சரவையில் மாற்றம் இருப்பதும் உறுதியாகி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post பாஜ மாநில புதிய தலைவர் விரைவில் அறிவிப்பு புதுச்சேரி அமைச்சரவையில் மாற்றம்: மேலிட பொறுப்பாளர் சுரானா பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Surana ,Puducherry ,Nirmal Kumar Surana ,Teja coalition government ,Dinakaran ,
× RELATED பெண்கள் பாதுகாப்பில் பாஜக நாடகம்:...