பிஜப்பூர்: சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்களின் கண்ணி வெடியில் சிக்கிய காரில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேர், டிரைவர் ஒருவர் பலியாகினர்.சட்டீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நக்சலைட்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அப்பகுதியில் 2026ம் ஆண்டுக்குள் நக்சலைட்கள் இல்லாத பகுதியாக மாற்ற ஒன்றிய, மாநில அரசுகள் உறுதி அளித்துள்ளன. இதற்காக நக்சலைட்களை கண்காணிக்கும் மற்றும் ரோந்து பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், நக்சல் எதிர்ப்பு பணியில் ஈடுபட்டு வரும் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் பாதுகாப்பு படை (டிஆர்ஜி) வீரர்கள் நேற்று ஸ்கார்பியோ காரில் பிஜப்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வாகனம் குத்ரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்பேலி கிராமத்திற்கு அருகில் வந்த போது, நக்சல்கள் பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருந்த ஐஇடி வகை கண்ணி வெடிகள் வெடித்தன.
இதில் வாகனம் வெடித்துச் சிதறியது. அதிலிருந்த 8 பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வாகன டிரைவரும் உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கடந்த 2 ஆண்டுகளில் பாதுகாப்பு படையினர் மீது நக்சலைட்கள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என காவல்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். கடந்த 2023 ஏப்ரல் 26ம் தேதி தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்பு வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை நக்சல்கள் வெடிக்கச் செய்ததில் 10 போலீசார் பலியாகினர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து சட்டீஸ்கர் துணை முதல்வர் அருண் சாஹோ அளித்த பேட்டியில், ‘‘இது கோழைத்தனமான தாக்குதல். 2026 மார்ச்சுக்குள் நக்சல்களை ஒழிப்போம்’’ என்றார்.
The post சட்டீஸ்கரில் பயங்கரம் நக்சல் கண்ணி வெடியில் கார் சிக்கி பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேர் பலி appeared first on Dinakaran.