×

தேவாரத்தில் சேதமடைந்த 18ம் கால்வாய் பகுதிகளை சீரமைக்க வேண்டும்

*விவசாயிகள் கோரிக்கை

தேவாரம் : தேவாரம் – போடி பகுதிகளுக்கு திறக்கப்பட்ட தண்ணீர், பதினெட்டாம் கால்வாய் தூர்வாரப்படாததாலும், கரைகள் பலப்படுத்தப்படாததாலும் வீணாகி வருகிறது. ஆகையால் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள கோம்பை, தேவாரம், பண்ணை புரம் மற்றும் போடி புறநகர் பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெறும் வகையில் 18ம் கால்வாய் அமைக்கப்பட்டு வருடம் தோறும் பாசன வசதிக்காக முல்லைப் பெரியாற்றிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்த வருடம் அதேபோல் பாசனத்திற்காக கடந்த 21-ந்தேதி தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் உத்தரவின் அடிப்படையில், முல்லைப் பெரியாற்றிலிருந்து பதினெட்டாம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் பல வருடங்களாக கால்வாயில் தூர்வாரும் பணி மேற்கொள்ளாமல் பாசனத்திற்காக தண்ணீரினை திறந்ததால் ஆங்காங்கே உடைந்த கால்வாய் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலை மற்றும் கால்வாய் ஓரமாக உள்ள விவசாய நிலங்களில் தேங்கி நிற்கிறது. பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் செல்லாமல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கூடலூர் வைரவன் ஆற்றில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது 10 நாட்களாகியும், இன்னும் தேவாரம் – போடி பகுதிக்கு முழுமையாக சென்று அடையவில்லை. தற்போது தண்ணீர் கண்மாய்களை நோக்கி செல்லாமல் வீணாகச் செல்கிறது.

ஆகையால் பதினெட்டாம் கால்வாயில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, கடைமடை பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேவாரத்தில் சேதமடைந்த 18ம் கால்வாய் பகுதிகளை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : canal ,Thevaram ,Thevaram - Bodi ,Theni district ,Dinakaran ,
× RELATED மரக்காணம் கால்வாயில் மூழ்கிய 3பேர் உடல்கள் மீட்பு