தர்மபுரி, டிச.30: பாலக்கோடு அருகே கேசர்குழி அணையை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. புதர் மண்டிய நிலையில் உள்ள பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கேசர்குழி அணை 25அடி உயரத்தில் உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, தற்போது அணையில் 16 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கேசர்குழி அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதியாக கொடைகரை, பெட்டமுகிலாளம், கோட்டூர்மலை, ஏரியூர், மொரப்பூர் ஆகிய காப்புக்காடு பகுதிகள் உள்ளன. பெல்ரம்பட்டி, கரகூர், சீரியம்பட்டி, கோட்டூர், ஈச்சம்பள்ளம், காடையம்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் 4,500 ஏக்கர் விளை நிலங்கள், இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பரவலாக பெய்ததால், கேசர்குழி அணை நிரம்பியது. ஒவ்வொரு ஆண்டும் அணை நிரம்பியுடன், உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் உபரிநீர், சுமார் 18 கிலோ மீட்டர் பயணமாகி சின்னாற்றில் கலந்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலக்கிறது.
அணையின் உபரிநீர் வீணாவதால், கோடைக்காலத்தில், அணையின் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய தண்ணீர் இருப்பு இருப்பதில்லை. இதனால் நிலத்தடி நீரும் அதல பாதாளத்திற்கு சென்று விடுகிறது. எனவே, கேசர்குழி அணையின் உபரிநீர் வெளியேற்றும் கால்வாயில், தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு சார்பில் திருமல்வாடி என்ற இடத்தில், 40 மீட்டர் அகலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. தமிழ்நாடு நீர்வளத்துறையின் நபார்டு திட்டத்தின் கீழ், ₹1.81 கோடி மதிப்பீட்டில் இந்த தடுப்பணை, கடந்த ஆண்டு கட்டப்பட்டது. தற்போது 6 அடி ஆழத்திற்கு, 40 மீட்டர் அகலத்தில் சுமார் ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால், அணை விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், அணையை சுற்றிலும், பாசன கால்வாய்களிலும் ஆக்கிரமிப்பில் உள்ளன. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணை பராமரிப்பு, பாசன கால்வாய் தூர்வார சென்றால், அங்குள்ளவர்கள் ஒத்துழைப்பு தராமல் அதிகாரிகளை மிரட்டுகின்றனர். பாசன கால்வாய் கரையின் தடுப்புகளை சேதப்படுத்தி உள்ளனர். கால்வாய் பகுதிகள் புதர்மண்டி உள்ளது. மாலை நேரங்களில், மது குடிக்கும் இடமாக மாறி உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கேசர்குழி அணையை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, அந்த காலியிடங்களை தூய்மைப்படுத்தி, சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில், பூங்கா அமைத்து போதிய வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மேலும், அணையில் உள்ள மின்விளக்குள் எரிவதில்லை. பாசன கால்வாயில் ஆக்கிரமிப்புகளை, போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்து வரும் கேசர்குழி அணையை தற்போது பொதுப்பணித்துறை கண்டுகொள்ளாததால், பராமரிப்பின்றி புதர்கள் மண்டி கிடக்கின்றன. புதருக்குள் பாம்புகள் நடமாட்டமும் உள்ளது. அணையின் இரு பகுதி கரைகள் முன்பு வயல்கள், திறந்த வெளியாக இருப்பதால் குடிமகன்களின் கூடாரமாக மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும் காலி மது பாட்டில்களும், பிளாஸ்டிக் கழிவுகளும் நிறைந்துள்ளது. மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறும் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் புதர் மண்டி கிடக்கிறது. அணையின் அருகே மாட்டு கொட்டகை அமைத்து, மாடுகளை அங்கே கட்டி வருகின்றனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
The post புதர் மண்டி கிடக்கும் கேசர்குழி அணை appeared first on Dinakaran.