×

முன் அனுமதியின்றி மாணவர்கள், பணியாளர்கள் தவிர பல்கலைக்கழகங்களில் வெளிநபர்களுக்கு அனுமதியில்லை: உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அனைத்து பல்கலைக் கழகங்களிலும், மாணவர்கள், பணியாளர்கள் தவிர்த்து முன் அனுமதியின்றி வேறு யாரும் வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையானதை தொடர்ந்து தமிழக உயர்கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி உயர்கல்வி நிறுவனங்களில் பின்பற்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித் துறை செயலர் கோபால் தலைமையில் இணையவழியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில்நுட்ப கல்வித் துறை ஆணையர் டி.ஆபிரகாம், மாநில பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து மாநில பல்கலைக்கழகங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். வெளிநபர்கள் மற்றும் வளாகத்துக்குள் உள்ளிருப்பவர்களால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றால் அவர்களை முழுமையாக பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து தவிர்க்க வேண்டும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் உட்புற புகார் குழு மற்றும் உதவி மையம் அமைக்க வேண்டும். குறிப்பாக பணிச்சூழலில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்காக அமைக்கப்படக்கூடிய ‘போஸ்’ அமைப்பு கட்டாயம் இருக்க வேண்டும்.

எலக்ட்ரீசியன்கள், கேன்டீன் தொழிலாளர்கள், ஒப்பந்தம் மற்றும் கட்டுமான பணியாளர்கள் உட்பட வெளியாட்களை பயோமெட்ரிக் வருகைப்பதிவு கொண்டு அவர்கள் வருகையை பராமரிக்க வேண்டும். மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு அடையாள அட்டை அவசியமாகும். போதைப்பொருள் தடுப்புக்குழு போன்ற முக்கிய குழுக்கள் வளாகத்தில் திறம்பட செயலாற்ற வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆலோசனை, புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் அதில் வெளியிடப்பட்டுள்ளன.

The post முன் அனுமதியின்றி மாணவர்கள், பணியாளர்கள் தவிர பல்கலைக்கழகங்களில் வெளிநபர்களுக்கு அனுமதியில்லை: உயர்கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Higher Education Department ,Chennai ,Anna University ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் உயர்க்கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்