×

கைதிகள் தயாரிப்பு பொருள் விற்பனையில் முறைகேடு.. தவறிழைத்த உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு!!

சென்னை : சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்தால் துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த கோகிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர் சிறையில் பார்த்த பணிக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஐரான வழக்கறிஞர் புகழேந்தி, தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் 14 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக, மத்திய தணிக்கை துறை கூறியது எனத் தெரிவித்து அதுதொடர்பாக செய்திதாள்களில் வெளியான செய்தியை தாக்கல் செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மூன்று அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், “தவறு செய்தவர்களை சீர்திருத்துவதற்கு சிறைக்கு அனுப்புகிறோம். ஆனால் சிறையில் இருக்கும் சிறைத்துறை அதிகாரிகள் தவறிழைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் தவறிழைத்த உயர் அதிகாரிகள் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறிழைத்ததற்கான முகாந்திரம் இருந்தால் சஸ்பெண்ட் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post கைதிகள் தயாரிப்பு பொருள் விற்பனையில் முறைகேடு.. தவறிழைத்த உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : HC ,Chennai ,Madras High Court ,Kokila ,Puducherry ,Madras High Court… ,
× RELATED கட்டிட விதிமீறல் மீது விரைந்து நடவடிக்கை: மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு