×

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: தொல்லியல் அறிஞர்கள் மனு

மதுரை: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டுமெனக் கூறி தொல்லியல் அறிஞர்கள் மனு அனுப்பியுள்ளனர். மதுரையைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் உள்ளிட்ட பலர் மதுரை கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது : மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி பல்லாயிரம் ஆண்டு முந்தைய வரலாற்றுச் சுவடுகளை கொண்டது. இது ஒரு தொன்மையான சமணத்தலம். இங்கு கிபி 7-8ம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரை சிவன் கோயில் உள்ளது. இங்கு அரிய லகுலீசர் சிற்பம் ஒன்றும் குடைவிக்கப்பட்டுள்ளது.

இங்கு கிபி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு மூலம் இவ்வூர் அக்காலத்தில் பெரும் வணிகத்தலமாக இருந்தது வெளிப்படுகிறது. இவ்வூரின் காவல் முக்கியத்துவம், ராணுவ நடவடிக்கை போன்ற செய்திகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த அரிட்டாபட்டிக்கு சுமார் 5 கிமீ தொலைவிலேயே மாங்குளம் என்னும் ஊரின் மலைக்குகையில் ஆறு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.

இக்கல்வெட்டுகளில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்ட நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மலையின் சுற்று வளாகத்தில் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் நிலவுகிறது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவமும், பாரம்பரிய பெருமையும் நிறைந்த அரிட்டாபட்டியில் ஒன்றிய அரசு டங்ஸ்டன் இழை சுரங்கம் அமைக்கும் முயற்சியை தொல்லியல் ஆய்வாளர்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஒருபுறம் வரலாற்று சின்னங்களைப் பாதுகாப்பதற்குப் பல கோடிகளை செலவழிக்கும் ஒன்றிய அரசு, வளர்ச்சி என்ற பெயரில் இத்தகைய வரலாற்று சின்னங்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், பாதுகாக்க வேண்டிய வரலாற்று ஆதாரங்கள் அழியக்கூடிய ஆபத்தான முயற்சியை தொல்லியல் ஆய்வாளர்களாகிய நாங்கள் கண்டிக்கிறோம். முக்கியத்துவம் வாய்ந்த அரிட்டாபட்டி பகுதியில் அதன் சுற்று வட்டார கிராமங்களில் டங்ஸ்டன் இழை சுரங்கத்தை அனுமதிக்க கூடாது. இத்திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

The post டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: தொல்லியல் அறிஞர்கள் மனு appeared first on Dinakaran.

Tags : EU government ,MADURAI ,Chandalingam ,Aritabati ,Union Government ,
× RELATED வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பேரிடராக...