செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில், 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்னியர் சமுதாயத்திற்கு அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி இட ஒதுக்கீடு வழங்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் இதுவரை இட ஒதுக்கீடு வழங்காததை வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் பாமக மத்திய மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இதில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட செயலாளர் ஏழுமலை உள்பட பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் என உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
மதுராந்தகம்: செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற வழி காட்டுதலின்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தனி இட ஒதுக்கீட்டை உடனே வழங்கக்கோரி மதுராந்தகம் பழைய நகராட்சி கட்டிடம் முன்பாக கண்டன ஆர்பாட்டம் நேற்று நடந்தது. இதில், மாவட்ட செயலாளர் சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குணசேகரன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் குமரவேல், கோபால கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சதீஷ் அனைவரையும் வரவேற்றார். இதில், இளைஞர் சங்க மாநில செயலாளர் பொன்.கங்காதரன், ஆசிரியர் பாதுகாப்புக்குழு தலைவர் பரந்தாமன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் என 300க்கம் மேற்பட்ட பாமகவினர் கலந்து கொண்டனர்.
The post செங்கல்பட்டில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு பாமக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.