×

அடையார் 13வது மண்டல அலுவலகத்தில் பொறியியல் துறை மேலாளர் அறையிலிருந்து கட்டுக்கட்டாக ரூ.1.22 லட்சம் பணம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சியின் அடையார் 13வது மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி ஜனனி அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.1.22 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை பெருநகர மாநகராட்சியின் அடையார் 13வது மண்டல அலுவலகத்தில் அதிகளவில் பணம் நடமாட்டம் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர் புகார்கள் வந்தது.

அந்த புகாரின் படி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையிலான 6 பேர் கொண்ட குழு நேற்று மதியம் 11.15 மணி முதல் மாலை 4 மணி வரை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, அடையார் மண்டலத்தில் உள்ள அனைத்து கதவுகளும் மூடப்பட்டது. ஊழியர்கள் யாரையும் போலீசார் வெளியே விடவில்லை. அதேபோல் வெளியாட்கள் யாரையும் அலுவலகத்திற்குள் நுழைய விடவில்லை.

பிறகு அலுவலகத்தில் அனைத்து அதிகாரிகள் அறைகள் மற்றும் வரவு செலவுக்கான கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  அப்போது சென்னை மாநகராட்சியின் 13வது மண்டல பொறியாளர் பிரிவு மேலாளராக பணியாற்றி வரும் ஜனனி என்பவரின் அறையை சோதனை செய்த போது, கணக்கில் வராத ரூ.1.22 லட்சம் பணம் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம் குறித்து பெண் அதிகாரியிடம் டிஎஸ்பி பிரியதர்ஷினி விசாரணை நடத்தினர்.

ஆனால் பணத்திற்கான வரவு குறித்து அவரால் பதில் சொல்ல முடியாமல் இருந்தார். இதையடுத்து ரூ.1.20 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பெண் அதிகாரி ஜனனி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அடையார் 13வது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post அடையார் 13வது மண்டல அலுவலகத்தில் பொறியியல் துறை மேலாளர் அறையிலிருந்து கட்டுக்கட்டாக ரூ.1.22 லட்சம் பணம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Engineering Department ,Adyar 13th Zonal Office ,-Corruption Department ,Chennai ,Anti-Corruption Department ,Janani ,Adyar 13th Zonal Office of the ,Chennai Corporation ,Adyar 13th Zonal Office of the Chennai Metropolitan Corporation ,Dinakaran ,
× RELATED தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை...