×

கணவர் வீட்டில் தாய், தோழியுடன் 3 ஆண்டு தங்கி ஜாலி ஒரு ஆணுக்கு இவ்வளவு கொடுமையா? விவாகரத்து வழங்கி ஐகோர்ட் அதிரடி

கொல்கத்தா: திருமணம் முடிந்த பின்னர் தாய், தோழியுடன் கணவர் வீட்டில் 3 ஆண்டு தங்கி கொடுமைப்படுத்தியதால், கணவருக்கு விவாகரத்து வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் தம்பதிக்கு 2005 டிசம்பர் 15ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மனைவி தன்னுடைய தாயார், தோழி ஆகியோரை கணவர் வேலை செய்து வரும் கொல்கத்தாவில் உள்ள நர்கெல்டங்கா இல்லத்திற்கு அழைத்து வந்து தங்கினார்.

மாமியார் மற்றும் மனைவியின் தோழி ஓரிரு நாளில் வீட்டை விட்டு செல்வார்கள் என்று பார்த்தால் அதற்கு வழியே இல்லை. மாறாக தோழியின் நண்பர்கள், உறவினர்கள், மனைவியின் உறவினர்கள் என பெரிய பட்டாளமே வந்தது. சரியாக குடும்பம் நடத்த முடியவில்லை. கேட்டால் விருப்பம் இல்லை என்று மனைவியிடம் இருந்து பதில். ஆனால் கணவனின் அத்தனை வசதிகளையும் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி தோழி, தோழியின் குடும்பத்தினர், நண்பர்களும் அனுபவித்து வந்தனர்.

வெறுத்துப்போன கணவர் 2008 செப்.25 அன்று விவாகரத்து கேட்டு மனு செய்தார்.அந்த சமயத்தில் அவர் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கோலாகாட்டில் தங்கியிருந்தார். ஆனால் அவரது கொல்கத்தா இல்லத்தில் மனைவி, மாமியார், அவரது தோழி உள்ளிட்டோர் தங்கியிருந்தனர். ஆனால் மனைவி கொடுமைப்படுத்துவதாக கூறி கணவர் தொடர்ந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி விவாகரத்து வழங்க மறுத்துவிட்டது.

இதையடுத்து அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சப்யசாசி பட்டாச்சார்யா, உதய்குமார் அடங்கிய அமர்வு, கணவனுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர். அந்த தீர்ப்பில்,’ தாம்பத்ய வாழ்க்கைக்கு திரும்பக்கூடாது என்று மனைவி நினைத்து தனது தாய், தோழி ஆகியோரை தன்னுடன் வைத்து இருந்த செயல் மிகவும் கொடுமையானது. மேலும் அவரது குடும்பத்தினரை கணவர் மீத திணித்தல் திருமணக்கொடுமை ஆகும்.

அதோடு விடாமல் அவர் கொடுமைப்படுத்தியதாக போலீசார் பொய் புகார் செய்தது அதை விட கொடுமை. இந்த வழக்கில் கணவருக்கு ஆதரவாக விவாகரத்து ஆணையை வழங்க விசாரணை நீதிமன்றம் மறுத்தது மிகவும் தவறானது. ஏனெனில் இந்த வழக்கில் மனைவியால் கணவர் மிகவும் மனக்கொடுமை செய்யப்பட்டுள்ளார். விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அவர் மீது போலீசில் புகார் கொடுத்த மனைவி குடும்பத்தினர் தொடர்ந்து அவரது வீட்டிலேயே தங்கியுள்ளனர். ஆனால் அவர் தனியாக தங்கியுள்ளார்.

கணவரின் இல்லத்தில் தனது தோழி மற்றும் தனது குடும்பத்தினரை மனைவி தொடர்ந்து தங்க வைத்து இருப்பது பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மனைவி வீட்டில் இல்லாத நாட்களிலும் அவரது குடும்பத்தினர், அவரது தோழி ஆகியோர் தங்கியிருந்தது கண்டிப்பாகக் மிகப்பெரிய கொடுமை. மேலும் கணவனுடன் தாம்பத்திய வாழ்க்கைக்கு மறுப்புத் தெரிவிக்கும் முடிவை மனைவி ஒருதலைப்பட்சமாக எடுத்துள்ளார். நீண்ட காலமாக தொடர்ந்து கணவனை பிரிந்து வாழ்ந்துள்ளார்.

கணவருடன் குடும்பம் நடத்தாமல், அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதே சமயம் அவரது இல்லத்தில் தனது குடும்பத்துடனும், தனது தோழியுடனும் தங்கியிருந்து கொடுமைப்படுத்தியதன் மூலம் இனிமேல் கணவனும், மனைவியும் தொடர்ந்து ஒன்றாக வாழ்வது சாத்தியமில்லை என்று ஊகிக்க போதுமானது. எனவே இந்த வழக்கில் கணவருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் மனைவி கொடுத்த புகார்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post கணவர் வீட்டில் தாய், தோழியுடன் 3 ஆண்டு தங்கி ஜாலி ஒரு ஆணுக்கு இவ்வளவு கொடுமையா? விவாகரத்து வழங்கி ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Kolkata ,High Court ,West Bengal ,Dinakaran ,
× RELATED சண்டையை காரணமாக வைத்து விவாகரத்து...