×

சுங்கச்சாவடி புதிதாக திறந்த அன்றே கட்டண உயர்வு எதிர்த்து முற்றுகை போராட்டம்: தனியார் பஸ்கள் வரிசையாக நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

புவனகிரி: புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு கண்டித்து முற்றுகை போராட்டம் நடந்தது. விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சிதம்பரம்- கடலூர் இடையே உள்ள கொத்தட்டை பகுதியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை பணிகள் முடிவடையாமல் இதனை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திட்டமிட்டபடி நேற்று காலை 8 மணிக்கு சுங்கச்சாவடி திறக்கப்பட்டது. நகாய் திட்ட இயக்குநர் சக்திவேல் திறந்து வைத்தார்.

பின்னர் சுங்கச்சாவடி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டனர். இலகுரக வாகனங்கள் ஒருமுறை செல்வதற்கு ரூ.125, பேருந்துகள் ஒருமுறை செல்ல ரூ.425 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. அப்ேபாது பஸ்களுக்கான சுங்க கட்டணத்தை குறைக்காவிட்டால் பஸ்களை இயக்க மாட்டோம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு சுங்கச்சாவடி அருகே பஸ்களை நிறுத்தினர்.

பின்னர் தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்துவதற்காக கொத்தட்டை டோல்கேட் வந்தனர். அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் ராஷ்மி ராணி தலைமையில் பஸ் உரிமையாளர்கள் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, விசி கட்சி மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், ஊராட்சி தலைவர்கள், கிராம பொதுமக்கள் சுங்கச்சாவடியில் திரண்டனர்.

போலீசார் அவர்களிடமும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்குமாறு கூறினர். ஆனால் அவர்கள் திடீரென சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தரையில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

* கட்டணம் வசூலிப்பதில் குழப்பம், வாக்குவாதம்
முற்றிலும் ஆளில்லா சுங்கச்சாவடி என்பதால் வாகனங்கள் நின்று ஸ்கேன் செய்து பணம் கணக்கில் ஏறியவுடன் தானாகவே தானியங்கி கதவு திறக்கும். அதன் பிறகே வாகனங்கள் செல்ல முடியும். இந்நிலையில் நேற்று முதல் நாள் என்பதால் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது.

சுங்க கட்டணம் வசூலிக்க இருபுறமும் தலா 8 வழிகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 16 வழிகள் உள்ளன. ஆனால் இவற்றில் சில வழிகளில் தானியங்கி இயங்கவில்லை. இதனால் வாகனங்கள் பின்னோக்கி சென்று வேறு வழித்தடத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையே சுங்க கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் காத்திருந்ததால் பாதிக்கப்பட்ட பயணிகள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

The post சுங்கச்சாவடி புதிதாக திறந்த அன்றே கட்டண உயர்வு எதிர்த்து முற்றுகை போராட்டம்: தனியார் பஸ்கள் வரிசையாக நிறுத்தப்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Bhuvanagiri ,Villupuram-Nagapattinam National Highway ,Kothattai ,Chidambaram ,Cuddalore ,
× RELATED யாதாத்ரி புவனகிரி லட்சுமி நரசிம்மர்...