×

பெண்ணிடம் ‘பளார்’ வாங்கி சஸ்பெண்ட் ஆன உதவி ஜெயிலரின் உல்லாச வண்டவாளங்கள் அம்பலம்: கைதிகளை பார்க்க வரும் மனைவி, மகள்களிடம் சில்மிஷம்

மதுரை: சில்மிஷம் செய்து பெண்ணிடம் ‘பளார்’ வங்கி சஸ்பெண்ட் ஆன மதுரை சிறை உதவி ஜெயிலரின் உல்லாச வண்டவாளங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மதுரை மத்திய சிறைஉதவி ஜெயிலர் பாலகுருசாமி, கைதியின் மனைவி மற்றும் அவரது மகளான சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக மதுரை மாநகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணைக்கு வந்த உதவி ெஜயிலரின் முகத்தில் கைதியின் உறவினரான இளம்பெண் பளார்… பளார் என அறைந்தார். சட்டையை பிடித்துக் கொண்டு விடவில்லை. இதை வீடியோ எடுத்த சிலர் இணையதளத்தில் வெளியிட்டு வைரலாக்கினர்.

இதையடுத்து, அவர் மீது துறைரீதியிலான விசாரணை நடந்தது. சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் உதவி ஜெயிலர் பாலகுருசாமி மீது, பெண்களுக்கு எதிரான குற்றம் புரிதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடத்திய மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி, உதவி ஜெயிலர் பாலகுருசாமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். பாலகுருசாமி குறித்து சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.

மதுரை மத்திய சிறைக்கு நியமிக்கப்படும் எஸ்பிகளுக்கு டிரைவராக இருந்து வந்தவர் பாலகுருசாமி. உயர் அதிகாரிகளுக்கு டிரைவராக இருந்ததால் இவர் வைத்தது தான் சட்டமாம். அவர் விஷயத்தில் சக சிறைத்துறை போலீசார் மரியாதை கொடுக்க வேண்டுமாம். அவரிடம் முறைத்துக்கொண்டால் உயர் அதிகாரியிடம் கூறி மெமோ கொடுக்கச் செய்து விடுவாராம். இதனாலேயே அவருக்கு பயந்து சிறை போலீசார் இருந்துள்ளனர். சிறைக்குள் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்துள்ளார்.

இவர் பெண்கள் விஷயத்தில் பலவீனத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. சிறைக்கு மனு போட்டு கைதியை பார்க்க வரும் அவர்களது மனைவி, மகள்களிடம் பேசி, மிரட்டி, நெருக்கம் காட்டி வந்ததாகவும், பல பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சிறுமியை அழைத்துச்சென்று சில வாரம் குடும்பம் நடத்தி சிக்கி கைதான ஒருவர் சிறைக்கு வந்துள்ளார். அவரை பார்க்க வந்த வங்கியில் வேலை செய்யும் அவரது மனைவியிடம் நெருங்கிப் பழகி வந்தது உள்ளிட்ட அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது குவிகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

* போக்சோ சட்டத்தில் கைது
கைதியின் மகளான சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவத்தில், மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி (52) மீது மதுரை மாநகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் பாலகுருசாமியை போலீசார் நேற்று கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post பெண்ணிடம் ‘பளார்’ வாங்கி சஸ்பெண்ட் ஆன உதவி ஜெயிலரின் உல்லாச வண்டவாளங்கள் அம்பலம்: கைதிகளை பார்க்க வரும் மனைவி, மகள்களிடம் சில்மிஷம் appeared first on Dinakaran.

Tags : Jailer ,Madurai ,Madurai Prison ,Assistant ,Central Prison Assistant ,Jailer Balakurusamy ,
× RELATED மதுரையில் பள்ளி மாணவிக்கு பாலியல்...