*சைபர் கிரைம் கும்பல் நூதன மோடி
திருமலை : கேன்சல் காசோலையை போட்டோ ஷாப்பில் திருத்தி தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளரிடம் ரூ.9.50 லட்சம் கைவரிசை காட்டிய சைபர் கிரைம் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.செல்போன்கள் மூலம் வங்கியில் இருந்து பேசுகிறேன் எனக்கூறி ஏராளமான வாடிக்கையாளர்களிடம் பணத்தை கும்பல் மோசடி செய்து வந்தது.
இதில் ஒருசிலர் சிக்கியிருந்தாலும் பலர் தலைமறைவாகவே உள்ளனர். இதனால் வங்கி சார்பில் தங்களது வாடிக்கையாளர்கள் ஏமாறுவதை தடுக்க மேசேஜ் மூலமும், நேரிலும் ஆலோசனை வழங்கி வருகிறது. ஆனால் ஆந்திராவில் இந்த மோசடி கும்பலிடம் ஒரு வங்கியின் மேலாளரே ரூ.9.50 லட்சத்தை இழந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றிய விவரம்:
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் ஒரு பிரபல பைக் ஷோரூம் இயங்கி வருகிறது. இந்த ஷோரூமின் உரிமையாளரான கவிநாத்துக்கு பெங்களூருவில் உள்ள தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தொலைபேசி அழைப்பு வந்தது.
இதில் பேசிய மர்மநபர்கள் உணவு டெலிவரிக்காக 10 இருசக்கர வாகனங்கள் வேண்டும். இதற்காக ஷோரூம் லெட்டர்பேடில் விலைப்பட்டியல் மற்றும் கேன்சல் என எழுதிய காசோலை ஆகியவற்றை இணைத்து தபாலில் அனுப்பும்படி கேட்டுள்ளனர்.
ஒரேநேரத்தில் 10 பைக்குகளுக்கான ஆர்டர் வந்ததால் நிர்வாகத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் கேட்டபடி கேன்சல் என எழுதிய காசோலை மற்றும் ஆவணங்களை அனுப்பி வைத்தனர். அதனை பெற்றுக்கொண்ட மர்மநபர்கள், ஷோரூம் அனுப்பிய கடிதத்தில் திருத்தம் செய்து ஷோரூம் உரிமையாளர் கவிநாத் எழுதியது போன்றும், காசோலையில் உள்ள பணத்தை குறிப்பிடும் வங்கிகளுக்கு மாற்றும்படியும் லெட்டர்பேடில் திருத்தம் செய்துள்ளனர். மேலும் காசோலையில் கேன்சல் என எழுதப்பட்டிருந்ததை போட்டோஷாப் மூலம் அகற்றியுள்ளனர்.
பின்னர் மர்மநபர்கள் திருத்தப்பட்ட காசோலை, கடிதம் ஆகியவற்றை அனந்தபுரம் மாவட்டம் ராம்நகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் அம்பரேஸ்வர சுவாமிக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளனர். பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தான் பைக் ஷோரூம் உரிமையாளர் கவிநாத் பேசுவதாகவும், மருத்துவமனையில் இருப்பதால் காசோலை தொகையான ரூ.9.50 லட்சத்தை அவசரமாக நான் சொல்லும் வங்கிக்கு மாற்றுமாறு தெரிவித்துள்ளனர்.
இதை உண்மை என நம்பிய வங்கி நிர்வாகாத்தினர்,ரூ.9.50 லட்சத்தை மர்மநபர் கூறிய வங்கிக்கு மாற்றியுள்ளனர். வங்கியின் பெயரில் நடக்கும் மோசடி குறித்து வாடிக்கையாளர்களை ஜாக்கிரதையாக இருக்கும்படி சொல்லும் வங்கி மேலாளாரே சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி ரூ.9.50 லட்சத்தை இழந்துள்ளார். அதன்பின்னர் உண்மை நிலை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக வங்கி மேலாளர் அளித்த புகாரின்பேரில் அனந்தபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுவரை வங்கியின் பெயரை சொல்லி வாடிக்கையாளர்களிடம் சைபர் கிரைம் குற்றவாளிகள் பணத்தை அபேஸ் செய்து வந்த நிலையில் தற்போது வங்கி மேலாளரிடமே கைவரிசை காட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post வாடிக்கையாளர்களை ஏமாற்றியதெல்லாம் பழசு பைக் ஷோரூம் உரிமையாளர் போல் பேசி வங்கி மேலாளரிடம் ₹9.50 லட்சம் பறிப்பு appeared first on Dinakaran.