- கோமுக்கி அணை
- Durwari
- கொமுக்கி அணை
- Kalvarayanmalai
- கல்குரிச்சி மாவட்டம்
- கம்ராஜர்
- ஆழப்படுத்துங்கள்
- துர்வரி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணை கடந்த 1967ம் ஆண்டு சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 46 அடி வரை நீரை தேக்கி வைக்கும் வகையில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இதில் ஆற்றுப் பாசனத்தின் மூலம் 5,860 ஏக்கர் விவசாய நிலமும், முதன்மை கால்வாய் பாசனத்தின் மூலம் 5000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. அதாவது முதன்மை பாசன கால்வாய் மூலம் வடக்கநந்தல், மாத்தூர், மண்மலை, மாதவச்சேரி, பால்ராம்பட்டு, செல்லம்பட்டு, கரடிசித்தூர் ஆகிய 7 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.
மேலும் கோமுகி ஆற்று பாசனத்தின் மூலம் வடக்கநந்தல், சோமண்டார்குடி, கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், தென்கீரனூர், நீலமங்கலம், குரூர், பொரசகுறிச்சி, விருகாவூர், நாகலூர், வேளாக்குறிச்சி கடத்தூர், நல்லாத்தூர், குதிரைசந்தல், காரனூர், தென்செட்டியநந்தல், பைத்தந்துறை உள்ளிட்ட 33 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுகின்றனர். கோமுகி ஆற்றின் குறுக்கே வடக்கநந்தல், சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், ஏமப்பேர், கள்ளக்குறிச்சி, தென்கீரனூர், நீலமங்கலம், குரூர், பொரசக்குறிச்சி, விருகாவூர், நாகலூர், வேளாக்குறிச்சி கிராமங்களில் அணைக்கட்டுகள் கட்டப்பட்டு, அதன்மூலம் ஏரிகளில் நீரை நிரப்பியும் விவசாயம் நடந்து வருகிறது.
கோமுகி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கும் குடிநீர் வசதி கிடைக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பருவமழை தொடர்ந்து பெய்து வந்ததால் சம்பா பருவத்துடன் சேர்த்து 3போகமும் நெல் அறுவடை செய்தனர். இதனால் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அந்த காலக்கட்டத்தில் செழிப்புடன் இருந்தனர். அதன்பிறகு பருவக்கால மாற்றத்தால் மழை பொய்த்து போனது. கோமுகி அணை கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் தூர்ந்துபோய் மண் மேடாக காட்சி அளிக்கிறது. மழை காலத்தில் மலையில் இருந்து நீர்வரத்து இருக்கும்போது நீரின் வேகத்தில் மண், மணல், சிறு கற்களும் அடித்து வரப்பட்டு அணையில் நீர்பிடிப்பு தளத்தில் படிந்து காலப்போக்கில் நீர்பிடிப்பு பகுதி முழுவதும் மண்மேடாக உள்ளது.
இதனால் 46 அடி உள்ள கோமுகி அணை மண் மேடாகி 28 அடி அளவில் மட்டுமே அணையில் நீரை சேமிக்க முடிகிறது. இந்த நீரை கொண்டு ஒரு பருவம் மட்டுமே சாகுபடி செய்ய முடிகிறது. சில நேரங்களில் ஒரு பருவத்திற்கே போதுமான நீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து போகின்றன. கோமுகி அணை விவசாய பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இதனால் கோமுகி அணையை தூர்வார வேண்டும் என்று பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைக்கு கோமுகி அணையை தூர்வாராததால் அணையில் குறைந்த அளவு நீரையே சேமிக்க முடிகிறது. இதனால் மழைகாலத்தில் அதிகமான நீர் அணையில் இருந்து வெளியேறி, ஆற்றின் வழியாக வீணாக கடலில் கலக்கிறது. அதாவது குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வீணாகும் சூழல் உள்ளது. ஆகையால் கோமுகி அணைக்கு முன்பகுதியில் தடுப்பணைகள் கட்டுவதுடன் கோமுகி அணையை உடனடியாக தூர்வாரி ஆழப்படுத்த மாவட்ட ஆட்சியர் சிறப்பு நடவடிக்கை எடுத்து, தமிழக அரசிடம் அனுமதி பெற்று போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்பது விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post 46 அடி ஆழம் இருந்தும் 28 அடி நீரே சேமிக்க முடிகிறது நீர்பிடிப்பு முழுவதும் மண் மேடாக மாறிய கோமுகி அணை: தூர்வாரி ஆழப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.