அவசர செலவுக்கு அக்கம் பக்கத்தில், நண்பர்களிடம் பணம் கேட்டால் கூட கிடைத்து விடும். ‘கண்டிப்பா திருப்பி தந்துடுவாரு…’ என்ற நம்பிக்கையும், கஷ்டத்தில் உதவ வேண்டும் என்ற மனிதத்தன்மை எந்த அளவீட்டையும் பார்ப்பதில்லை. நகை வைத்திருப்பவர்களுக்கு அடமான கடன் வாங்குவதும் சுலபமாகி விடுகிறது. ஆனால், உதவிக்கரம் நீட்டும் நட்பும், நகையும் இல்லாதவர்கள் நிலையும், படு திண்டாட்டம்தான். வீட்டுக் கடன், வாகன கடன் மட்டுமல்ல… அவசரத்துக்கு தனிநபர் கடன் கூட வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் வாங்க படாத பாடு பட வேண்டும்.
இவர் கடனை திருப்பித் தருவார் என்ற நற்சான்றை கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்கள் தான் தருகின்றன. அந்த நிறுவனங்கள் தரும் கிரெடிட் ஸ்கோரை அளவீடாக வைத்து தான், கடன் தரலாமா? வேண்டாமா? என்பதை வங்கிகள், நிதி நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. அந்த அளவுக்கு கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், வீடு, வாகன கடன்கள், கல்விக்கடன், தனிநபர் கடன் வாங்க முயற்சிக்கும் ஒவ்வொரு இந்தியரின் பொருளாதார தலையெழுத்தை பன்னாட்டு நிறுவனம் மூலம் இயக்கப்படும் தனியார் கிரெடிட் ஸ்கோர் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.
இந்தியாவில், டிரான்ஸ் யூனியன் சிபில், எக்ஸ்பீரியன், ஈக்விபேக்ஸ் மற்றும் சிஆர்ஐஎப் ஹைமார்க் என 4 கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகள், ரிசர்வ் வங்கி அங்கீகாரத்துடன் செயல்படுகின்றன. இதில் பெரும்பான்மையாக சிபில் நிறுவனத்தின் கிரெடிட் ஸ்கோர்தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. 60 கோடிக்கும் மேலான தனிநபர்கள், 3.2 கோடிக்கும் மேலான வர்த்தக நிறுவனங்களின் கடன் விவரங்களை இந்த நிறுவனம் கையாள்கிறது. இந்தியாவில், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்துடன், அமெரிக்காவை சேர்ந்த டிரான்ஸ் யூனியன் 2003 பங்குதாரராக சேர்ந்தது. 2017ல் 92.1 சதவீத பங்குகளை, அமெரிக்காவை சேர்ந்த டிரான்ஸ் யூனியன் வாங்கியது.
இதைத் தொடர்ந்து டிரான்ஸ் யூனியன் சிபில் லிமிடெட் என்ற பெயரில் இது செயல்படுகிறது. கிரெடிட் கார்டில் செலவு செய்த பணத்தை திருப்பிச் செலுத்துவது, தங்க நகைக்கடன், சொத்து அடமான கடன்களை திருப்பிச் செலுத்துவது, மாதாந்திர கட்டணங்களை முறையாக செலுத்துவது போன்ற தனிநபரின் பரிவர்த்தனை விவரங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு தான் சிபில் போன்ற கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்கள் வங்கி, நிதி நிறுவனங்களில் கடன் கோரி விண்ணப்பிப்பவருக்கு ரேட்டிங் வழங்குகின்றன. 750க்கு மேல் இருந்தால் கடன் கிடைப்பது உத்தரவாதம். 650க்கு மேல் இருந்தால் கூட சில நிறுவனங்கள் கடன் தருகின்றன. ஆனால், 600க்கும் கீழ் போய் விட்டால் கடன் வாங்குவது லேசுப்பட்ட விஷயமில்லை.
ஆனால், இந்த நடைமுறைகள் வெளிப்படையானதாக இல்லை. அதன் செயல்பாடுகள் முரண்பட்டுள்ளன. பல சமயங்களில் தவறான ரேட்டிங் தருவதால், கடன் கிடைக்காமல் சாமானிய மக்கள் அவதிப்படும் சூழல் உருவாகி விடுகிறது. மேலும், சிபில் நிறுவனத்துக்கு ரேட்டிங் தருவதற்கு தேவையே இல்லாத தனிநபரின் தகவல்கள் கூட கிடைத்து விடுகிறது. உதாரணமாக கடந்த 2019ம் ஆண்டு சிபில் நிறுவனத்துக்கு 79 கோடி பேர் அடங்கிய வாக்காளர் விவரங்களை அணுக அனுமதி கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சொத்து பதிவு, தனிநபர் மற்றும் நிறுவனங்கள் செலுத்தும் வருமான வரி விவரங்கள் கூட சிபில் நிறுவனத்துக்கு கிடைத்து விடுகின்றன.
தனிநபரின் இத்தனை விவரங்களும் தனியார் அமைப்புக்கு எளிதாக கிடைப்பதும், அதைவைத்து அந்த நிறுவனம் வழங்கும் மதிப்பீட்டை அடிப்படையாக கொண்டு கடன் வழங்குவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தனிநபர் விவரங்களின் பாதுகாப்புக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. எனவே, மிகுந்த ரகசியமாக இருக்க வேண்டிய பல கோடி இந்தியர்களின் தகவல்கள் வெளிநாட்டை சேர்ந்த ரேட்டிங் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
* அநியாய வட்டி
கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் பொதுத்துறை வங்கிகளில் கடன் கிடைப்பதில்லை. இதனால் தனியார் நிதி நிறுவனங்களைத்தான் நாட வேண்டி வரும். ஆனால், சில தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த எம்சிஎல்ஆர் அளவீட்டை விட அதிகமாக வட்டி வசூலிக்கின்றன. இதனால், 13 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான வட்டியில் கடன் வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் நடுத்தர மக்கள் தவிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
* விடாது துரத்தும் வேதனை
சாமானிய மக்கள், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு சொந்த வீடு, கார் வாங்குவது ஒரு கனவு. இதற்காக கடன் வாங்க தங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க முனைப்பு காட்டுகின்றனர். ஆனாலும், பலருக்கு இது சாத்தியமாவதில்லை. போன் பில், கிரெடிட் கார்டு பில் தாமதமாக கட்டினால் கூட கிரெடிட் ஸ்கோரை பாதிக்கிறது. இதில் இருந்து தப்பித்தால் போதும் என கிரெடிட் கார்டை சரண்டர் செய்த பிறகும், ஆண்டு கட்டணம் செலுத்த வில்லை என கூறி கிரெடிட் ஸ்கோரை குறைத்து விடுகின்றனர்.
இதுபோல், வாங்கிய கடனில் ஒரு இஎம்ஐ தவறினால் கூட கிரெடிட் ஸ்கோரை சிபில் குறைத்து விடுகிறது. சிலர் கிரெடிட் கார்டு நிலுவையை செட்டில் செய்த பிறகும், அவற்றுக்கு தடையில்லா சான்று பெறாவிட்டால் திண்டாட்டம்தான். கட்ட வேண்டிய தொகை நிலுவையில் இருப்பதாக காட்டி வட்டி மேல் வட்டி, அபராதம் போடப்படுகிறது. சில ஆயிரங்களில் இருந்த நிலுவைத் தொகை, லட்சங்களையும், கோடிகளையும் தொட்டு விடுகிறது. இதனால் கடன் வாய்ப்பு முற்றிலும் பறிபோவதோடு, லோக் அதாலத் வரை அலையாய் அலைந்து நொந்து போவதுதான் மிச்சம்.
* விவசாயிகளுக்கும் சிக்கல்
சில சமயம், கடன் வசூல் பொறுப்பை வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் சொத்து மறு சீரமைப்பு நிறுவனங்களுக்கு கொடுத்து விடுகின்றன. அவர்கள் மூலம் கடன் வசூல் செய்யப்பட்ட பிறகும், அவை பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. இதுவும் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கிறது. ரேட்டிங் நிறுவனங்களால் சாமானிய நடுத்தர மக்கள், விவசாயிகள், மாணவர்கள் வீடு வாகன கடன், கல்விக் கடன், பயிர் கடன்கள் வாங்க முடியாமல் திண்டாடுகின்றனர். விவசாயிகளுக்கும் இதே நிலைதான். பயிர் கடன்களுக்கு மானியம், தள்ளுபடிகளை அரசு அறிவிப்புகளால் கடன் சுமை தீர்ந்து விட்டாலும் இதனை முறையாக திருப்பி செலுத்தப்பட்ட கடனாக கிரெடிட் ஸ்கோர் நிறுவனங்கள் ஏற்பதில்லை.
தவறான தகவல்களால் கிரெடிட் ஸ்கோர் குறைந்தாலும், இந்த நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியமும் இல்லை என்ற அவல நிலை காணப்படுகிறது. இவ்வாறு பிரச்னைகளுக்கு மத்தியில், ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், வங்கிகள் கிரெடிட் ஸ்கோர் குறைவால் கடன் தர மறுத்தால் அதனை வாடிக்கையாளருக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. எனவே, அநீதியான, முறையற்ற இந்த நடைமுறையை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதோடு, சாமானிய மக்களின் நேர்மைக்கு அத்தாட்சி வழங்கும் பொறுப்பை தனியார் அமைப்புகள் கையில் கொடுப்பது கூடாது. அவசர கதியில் சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
* இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம்
சிபில் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, 11.9 கோடி பேர் அவ்வப்போது தங்கள் கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு உள்ளது என பார்த்து வருகின்றனர். இவர்களில் 43 சதவீதம் பேரின் கிரெடிட் ஸ்கோர் அதிகரித்துள்ளது. கிரெடிட் ஸ்கோர் பார்ப்பவர்களில் 77 சதவீதம் பேர் இளைஞர்கள் தான். இளைய தலைமுறையிடம் கிரெடிட் ஸ்கோர் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதானல் அவர்கள் அதனை குறித்த அளவுக்குள் பேணுவதற்காக நடவடிக்கைகளில் கவனமாக ஈடுபடுகின்றனர் என தெரிவித்துள்ளது.
* எவ்வளவு இருக்க வேண்டும்?
இந்தியாவில் 4 கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்கள் இருந்தாலும், சிபில் நிறுவன ரேட்டிங் தான் பெரும்பான்மையாக கடைப்பிடிக்கப்படுகிறது. 300 முதல் 900 வரை அளவிடப்படுகிறது. இதன்படி கிரெடிட் ஸ்கோர் விவரம்:
மோசம் 300-350
சராசரி 550-650
சிறப்பு 650-750
வெகு சிறப்பு 750-900
* கடன் பெற தகுதியற்ற 16 கோடி இந்தியர்கள்
கிரெடிட் ரேட்டிங் நிறுவன புள்ளி விவரத்தின்படி, இந்தியாவில் சுமார் 16 கோடி பேர் கடன் பெற தகுதியற்றவர்களாக உள்ளனர். அதாவது, அவர்களது கிரெடிட் ஸ்கோர் சராசரிக்கும் கீழ் உள்ளது. இதனால் அவர்களால் கடன் பெற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் கடன் பெற தகுதியற்றவர்கள் என, சிபில் உள்ளிட்ட கிரெடிட் ஸ்கோர் நிறுவனங்கள் தான் முத்திரை குத்துகின்றன. இதனை அளவீடாக வைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் இவர்களுக்கு கடன் தர மறுக்கின்றன.
* கிரெடிட் ஸ்கோர் பார்த்தவர்கள்
எண்ணிக்கை புறநகரில் அதிகரிப்பு
கடந்த நிதியாண்டில் மெட்ரோ நகரங்கள் மற்றும் புறநகர், கிராமங்களில் சுயமாக கிரெடிட் ஸ்கோர் பார்த்தவர்கள் விவரம் அதிகரிப்பு (முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிட்டு வழங்கப்பட்ட 2023-24 நிதியாண்டின் சிபில் புள்ளி விவரம்)
* அதிகரிக்கும் சுய பரிசோதனை
தனிநபர்கள் தங்கள் கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு எனத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது அதிகரித்து வருகிறது. கிரெடிட் ஸ்கோர்ட் வழங்கும் நிறுவனங்களில் முதன்மையானதாகத் திகழும் சிபில் நிறுவன புள்ளி விவரத்தின்படி கடந்த 2023-24 நிதியாண்டில் சுயமாக சிபில் கிரெடிட் ஸ்கோர் பார்ப்பவர்கள் எண்ணிக்கை 4.36 கோடி. கடந்த 5 ஆண்டுகளில் கிரெடிட் ஸ்கோர் பார்த்தவர்கள் எண்ணிக்கை வருமாறு:
2019-20 98 லட்சம்
2020-21 1.02 கோடி
2021-22 1.74 கோடி
2022-23 2.9 கோடி.
2023-24 4.36 கோடி
* கிரெடிட் ஸ்கோர் நிறுவனங்கள்
இந்தியாவில் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட 4 நிறுவனங்கள் கிரெடிட் ரேட்டிங் வழங்குகின்றன.
* டிரான்ஸ் யூனியன் சிபில்
இந்தியாவில் மிகவும் பிரபலமான கிரெடிட் ஸ்கோர் நிறுவனம் இது. அமெரிக்காவை சேர்ந்த டிரான்ஸ் யூனியன் பன்னாட்டு நிறுவனம் இதனை நிர்வகித்து வருகிறது.
* எக்ஸ்பீரியன்
சர்வதேச கிரெடிட் ஸ்கோர் நிறுவனமான இது, 2010ம் ஆண்டு முதல் இந்தியாவி்ல் செயல்படுகிறது.
* ஈக்விஃபேக்ஸ்
இந்த நிறுவனம் இந்தியாவில் 2010ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
* சிஆர்ஐஎப் ஹைமார்க்
இந்த நிறுவனம் இந்தியாவில் 2005ம் ஆண்டு முதல் இயங்குகிறது.
The post சாமானியர்களை ஆட்டிப்படைக்கும் கிரெடிட் ஸ்கோர்: நேர்மைக்கு அத்தாட்சி யார் கையில்? கடன் வாய்ப்பை நிர்ணயிக்கும் தனியார் அமைப்புகள்; வெளிப்படை தன்மை இல்லாததால் தவிக்கும் மக்கள் appeared first on Dinakaran.