×

ராணிப்பேட்டையில் அடுத்தடுத்து குவியும் முதலீடுகள்: டாடா கார் ஆலையை தொடர்ந்து உலகின் முன்னணி நிறுவனங்களின் காலணி உற்பத்தி தொழிற்சாலை; லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம்

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என உறுதி ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டில் தொழில் துறையை வழி நடத்தி வருகின்றார். அந்த இலக்கை எய்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அரசு முறை பயணம் செய்து, தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

அந்த வகையில், அமெரிக்க நாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டு 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் கொள்கைக்கேற்ப, தொழில் திட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஓச்சேரி, பனப்பாக்கம், அகவலம், துறையூர், நெடும்புலி, மேலப்புலம், பெருவளையம், சிறுவளையம், உளியநல்லூர், வெளிதாங்கிபுரம், சயனபுரம், அவளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் படித்து முடித்து வேலைக்காக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் போன்ற பகுதிகளில் இயங்கும் பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைக்காக பஸ்களில் சென்று வருகின்றனர்.

இந்த பகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில்தான் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பனப்பாக்கம் பகுதியில் 1,312 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. சிப்காட் தொழிற்பேட்டை அமைய அகவலம், துறையூர், நெடும்புலி, பெருவளையம் ஆகிய நான்கு கிராமங்களில் 470 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டது. அந்த இடத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைய கடந்த செப்டம்பர் 28ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

முன்னணி கார் கம்பெனியான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் பிராண்ட் சொகுசு கார்களை தயாரிக்க ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிற்சாலையை அமைக்கிறது. இத்தொழிற்சாலை ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 470 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. இங்கு எலக்ட்ரானிக் சொகுசு கார்கள் தயாரிக்கப்படப்பட உள்ளது. இந்த வகையான கார்களுக்கான உதிரிபாகங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து, இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் அசெம்பிள் செய்து விற்கப்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் கார்களின் அனைத்து பாகங்களும் இங்கேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் கார்களும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இங்கு தயாரிக்கும் வாகனங்கள் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தைவான் நாட்டைச் சேர்ந்த ஹாங்பு இண்டஸ்ட்ரீஸ் குழுமம் 20க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களைக் கொண்ட பன்னாட்டு குழுமம் விளையாட்டு காலணிகளின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதன் மூலம் உலகளவில் 2வது பெரிய காலணி உற்பத்தியாளராக திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் நைக், கன்வர்ஸ், வேன்ஸ், பூமா, யுஜிஜி போன்ற சர்வதேச அளவில் வணிக முத்திரை கொண்ட நிறுவனங்களுக்கு காலணிகள் மேம்பாடு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி சேவைகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் ஹாங்பு நிறுவனத்திற்கு ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பனப்பாக்கம் தொழில் பூங்காவில் 200 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் இந்நிறுவனம் தற்போது ரூ.1,500 கோடி முதலீட்டில் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

மேலும் தமிழகத்தில் கிராண்ட் அட்லாண்டிக்கா பனப்பாக்கம் செஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொழிலை விரிவுபடுத்துவதற்காக ரூ.500 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதனால் 5,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கிராண்ட் அட்லாண்டிக்கா பனப்பாக்கம் செஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஹாங் பூ இண்டஸ்ட்ரியல் குரூப் உள்ளிட்ட நிறுவனம் வருகையால் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியும் பெருகும் நிலையை முதல்வர் ஏற்படுத்தியுள்ளார்.

இந்த தொழிற்பேட்டையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை தொடங்க உள்ளன. இதனால் ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்தும் நேரடியாக சுமார் 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேருக்கும் மறைமுகமாக சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேருக்கும் என்று சுமார் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறும் நிலை உருவாகியுள்ளது. வேலைக்காக மாவட்டங்களை விட்டு அதிகாலை நேரங்களில் பஸ் பிடித்து வெளியூர் சென்று வந்த நிலையில், சொந்த மாவட்டத்தில் வேலை கிடைக்க உள்ளதால், ராணிப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

* தூத்துக்குடியில் நாட்டிலேயே முதல் பர்னிச்சர் பார்க்
தமிழ்நாடு மாநிலத் தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) நாட்டிலேயே முதல் முறையாக சர்வதேச அறைகலன் பூங்காவை (பர்னிச்சர் பார்க்) தூத்துக்குடியில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதை தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடி மதிப்பில் பர்னிச்சர் பூங்காவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டினார். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரத்தடிகளை கொண்டு தூத்துக்குடியிலேயே சர்வதேச தரத்தில் பர்னிச்சர்கள் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டு இந்த பர்னிச்சர் பூங்கா திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிடைக்கும் ரப்பர் மரத்தடிகள், யூக்கலிப்டஸ், மலை வேம்பு, சில்வர் ஓக் போன்ற மரங்களும் பயன்படுத்தப்பட்டு, ஏற்றுமதி தரம்வாய்ந்த பர்னிச்சர் பொருட்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பர்னிச்சர் தொழிலுக்கு என்று நாட்டிலேயே முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக அமையவுள்ள இந்த அறைகலன் பூங்காவில் மரஅறுவை ஆலை, பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 100 நிறுவனங்கள் வரை இடம் பெற உள்ளது.

மேலும் பர்னிச்சர் தொழில் தொடர்பாக ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சி கூடம், தரத்தை பரிசோதிக்கும் ஆய்வுக்கூடம், தங்கும் விடுதிகள், உணவகங்கள் போன்ற அனைத்து வசதிகளும் இடம்பெறுகிறது. இந்த பூங்கா மூலம் சுமார் ரூ.4,500 கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன.

இதுதவிர தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் கார் தயாரிப்பு நிறுவனம் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்சாலையை அமைக்கிறது. இத்திட்டத்திற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்து புதிய பேட்டரி கார் தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்துள்ளார். தூத்துக்குடி – திருச்செந்தூர் ரோட்டில் நவீன வசதிகளுடன் கூடிய டைடல் நியோ பார்க் அமைந்துள்ளது. மேலும் சிங்கப்பூரைச் சேர்ந்த செம்கார்ப் ரூ.36,238 கோடி முதலீட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் கிரீன் ஹைட்ரஜன் ஆலையை அமைக்கத் தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 3.60 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

The post ராணிப்பேட்டையில் அடுத்தடுத்து குவியும் முதலீடுகள்: டாடா கார் ஆலையை தொடர்ந்து உலகின் முன்னணி நிறுவனங்களின் காலணி உற்பத்தி தொழிற்சாலை; லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Tata Car ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடியில் காலணி...