கொச்சி: தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் கொடுத்துள்ளதாக கூறி, வயநாடு எம்பி பிரியங்கா காந்திக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு வரும் ஜனவரியில் விசாரணைக்கு வருகிறது. கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட்டார். அவர் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முன்னதாக அவர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில், தனக்கு 4.24 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் 13.89 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், அவரது கணவர் ராபர்ட் வதேராவுக்கு 37.91 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
பிரியங்கா காந்திக்கு 15.75 லட்சம் ரூபாயும், ராபர்ட் வதேராவுக்கு 10,03,30,374 ரூபாயும் கடன் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், 29.55 லட்சம் மதிப்புள்ள 59.83 கிலோ வெள்ளி பொருட்கள், 4.41 கிலோ தங்க நகைகள், 2.5 கிலோ தங்கம் ஆகியன உள்ளதாகவும், ரூ. 8 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா சி.ஆர்.வி காரும் உள்ளதாக கூறியுள்ளார். அசையா சொத்துகளில் நிலம் வகையில், ரூ.2 கோடியே 10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள விவசாய நிலம் தன்னிடம் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இது தவிர, சிம்லாவில் 48,997 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட ஒரு வீடும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜகவை சேர்ந்த நவ்யா ஹரிதாஸ் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில், தன்னுடைய சொத்துக்கள் குறித்தும் தனது குடும்பத்தின் சொத்துக்கள் குறித்தும் சரியாக தகவல்களை வழங்கவில்லை. தவறான தகவல்களை வழங்கி உள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு சமமானது. எனவே பிரியங்கா காந்தியின் வெற்றியை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியுள்ளார். இம்மனு மீதான விசாரணை அடுத்தாண்டு ஜனவரியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள உயர் நீதிமன்றத்திற்கு வரும் 23ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை விடுமுறை நாட்கள் என்பதால் இந்த வழக்கு ஜனவரியில் விசாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
The post சொத்து பற்றி தவறான தகவல் பிரியங்கா காந்திக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் வழக்கு: வரும் ஜனவரியில் விசாரணை appeared first on Dinakaran.