×

போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? மணலி விரைவு சாலையை ஆக்கிரமித்து நிற்கும் லாரிகள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

திருவொற்றியூர்: மணலி விரைவு சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் லாரிகளால் குப்பை கழிவுகளை அகற்ற முடியாமல் தூய்மைப் பணியாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மற்ற வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, போக்குவரத்து போலீசார் லாரிகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவொற்றியூர் அருகே எர்ணாவூர் மேம்பாலம் முதல் எம்எப்எல் சந்திப்பு வரை உள்ள மணலி விரைவு சாலையில் தினமும் மாநகர பேருந்து, லாரி, கார், மோட்டார் பைக் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில். எர்ணாவூர் மேம்பாலத்தில் இருந்து சத்தியமூர்த்தி நகர் போகக்கூடிய சாலை ஓரத்தில் ஏராளமான கன்டெய்னர் லாரிகள் ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அருகில் குடியிருப்புகளுக்கு வாகனத்தில் செல்பவர்கள் திரும்ப முடியாமல் சிரமப்படுவதோடு இந்த பகுதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட முடியாத நிலை உள்ளது.

இந்த சாலையில் குப்பை கழிவுகள் ஆங்காங்கே தேங்கி கிடப்பதோடு சேறும் சகதியுமாகி உள்ளது. மேலும் பல நாட்களாக பழுதடைந்து நிற்கும் வாகனங்களை பதுங்கும் இடமாக சமூகவிரோதிகள் பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து போலீசாரும் ஆக்கிரமிப்புகள் குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, இந்த சாலையில் உள்ள லாரிகளின் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தி, சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘லாரிகளை பார்க்கிங் செய்ய சாத்தங்காடு ஸ்டீல் மார்க்கெட்டில் பார்க்கிங் யார்டு உள்ளது. ஆனால், அங்கு நிறுத்தினால் கட்டணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக லாரி உரிமையாளர்கள் இப்படி சாலையோரம் நிறுத்தி விடுகின்றனர். இதன் காரணமாக குடியிருப்பு பகுதிக்கு வாகனங்களில் செல்பவர்கள் போதிய வழி இல்லாமல் அங்குமிங்குமாக திரும்பி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. லாரிகள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் சென்னை துறைமுகத்திலிருந்து மணலி சிபிசிஎல் நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் உள்ளது.

இந்த குழாய்க்கு மேலே நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளில் இருந்து டீசல் கசிந்து ஆங்காங்கே சகதியாகி உள்ளது. இதனால் எதிர்பாராதவிதமாக தீப்பற்றினால் கச்சா எண்ணெய் குழாய் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது’’ என்றனர். இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மணலி விரைவு சாலையில் சத்திய மூர்த்தி நகரிலிருந்து எர்ணாவூர் செல்லக்கூடிய பாதையில் இடதுபுறம் சர்வீஸ் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு ஒப்புதலுக்கு தேசிய நெடுஞ்சாலை தலைமைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மறுபுறம் சர்வீஸ் சாலை அமைப்பது குறித்து துறை தலைமை அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும். சாலையோரம் உள்ள லாரிகளின் ஆக்கிரமிப்பை போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்த நடவடிக்கை வேண்டும்’’ என்றனர்.

The post போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? மணலி விரைவு சாலையை ஆக்கிரமித்து நிற்கும் லாரிகள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Lorries ,Manali Expressway ,Thiruvottiyur ,Dinakaran ,
× RELATED இணைக்கப்படாத கால்வாயில் இருந்து...