×

ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க சென்று நெரிசலில் பலியான பெண்ணின் மகன் மூளைசாவு: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சிக்கல்

திருமலை: ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான நிலையில், அவரது மகனுக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படத்தின் பிரிமியம் காட்சி கடந்த 4ம் தேதி இரவு திரையிடப்பட்டது. அப்போது தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜூன் வந்த நிலையில், ரசிகர்கள் கூட்டம் திரண்டது. இதில் கணவனுடன் வந்து கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது 8 வயது மகன் ஸ்ரீதேஜ் படுகாயமடைந்து ஐதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீதேஜின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் இரவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ‘ஸ்ரீதேஜுக்கு வென்டிலேட்டரில் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது. அவருக்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. எனவே அவர் தற்போது பூரண நலமுடன் இருப்பதாக கூற முடியாது. நிலையான நரம்பியல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை வென்டிலேட்டரில் இருந்து வெளியே கொண்டு வர செயற்கை குழாய் மூலம் உடலுக்கு தேவையான ஆக்சிஜனை செலுத்தும் டிராக்கியோஸ்டோமி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஸ்ரீதேஜின் மூளைக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை.

தற்போது குழாய் மூலம் உணவு அளித்து வருகிறோம். சிறுவனின் உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஸ்ரீதேஜ் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், மருத்துவமனைக்கு வந்த அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த் சிறுவனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நேற்று மாலை தெரிவித்தர். பெண் பலியான வழக்கில் கைதான அல்லு அர்ஜூன் ஐகோர்ட்டால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்த சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது அவருக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

The post ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க சென்று நெரிசலில் பலியான பெண்ணின் மகன் மூளைசாவு: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Allu Arjun ,Tirumala ,Pushpa ,Sandhya Theatre ,Hyderabad, Telangana… ,
× RELATED 14 மணி நேரத்துக்கு பிறகு சிறையில் இருந்து அல்லு அர்ஜுன் விடுதலை