தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை பல்வேறு சிறப்புகளை பெற்றதாகும். இங்கு ஆசியாவிலேயே 2வது பெரிய முதலைப்பண்ணை உள்ளது. இந்த அணையை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் முதலை பண்ணையையும் ஆர்வமுடன் பார்ப்பது வழக்கம். இதுதவிர சாத்தனூர் அணையிலும் ஏராளமான முதலைகள் வாழ்கின்றன. எனவே அணையில் மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் மிகவும் கவனமுடனே செயல்படுவார்கள்.
இந்நிலையில் 119 அடி உயரமுள்ள சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையின் பாதுகாப்பை கருதி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. அப்போது அணையின் இருந்து வெளியேறிய ஒரு ராட்சத முதலை 11 கண் மதகு பகுதியில் படுத்து கொண்டிருந்தது. இதை பார்த்த ஊழியர்கள், முதலையை மீண்டும் அணைக்குள் செல்லும் வகையில் விரட்டி விட்டனர்.
இந்நிலையில் இன்று காலை 11 கண் மதகு பகுதியில் மீண்டும் ஒரு ராட்சத முதலை, அணையில் இருந்து வெளியேறி வந்து படுத்து கொண்டிருந்தது. அப்போது வேப்பூர்செக்கடி கிராமத்தில் இருந்து அவ்வழியாக வந்த பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மற்றும் வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று முதலையை, அணைக்கு விரட்டிவிட்டனர்.
அணை தற்போது முழுவமையாக நிரம்பி தண்ணீர் திறந்து விடும் நிலையில் அங்கிருந்து முதலைகள் மீண்டும், மீண்டும் வெளியேறி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு வருவதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post சாத்தனூர் அணையில் இருந்து வெளியேறிய மேலும் ஒரு ராட்சத முதலை: பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சம் appeared first on Dinakaran.