அண்ணாநகர்: கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டிற்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து நாட்டு பூண்டுகள் அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. இந்த பூண்டு ஒரு கிலோ ரூ.550க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, விலை குறைந்த சீனா பூண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பூண்டு விற்பனை செய்ய இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றை மீறி ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மிக பெரிதாக காணப்படும் இந்த பூண்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதால், இதை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வியாபாரிகள், சீனா பூண்டுகளை வரவழைத்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் சீனா பூண்டுகளை அதிகமாக வாங்கி செல்கின்றனர். இதனால் நாட்டு பூண்டுகளின் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், ‘‘சீனா பூண்டு ரசாயனம் கலந்து வருவதால் இந்தியாவில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீறி கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டுக்கு தினமும் 10 வாகனங்களில் சீனா பூண்டுகள் வருகிறது. விலை குறைவாக உள்ளதால் அதன் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தற்போது ஒரு கிலோ சீனா பூண்டு ரூ.220க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை சாப்பிடுவதால் உடல் உபாதை ஏற்படும் என்பதால், உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் தடையை மீறி சீனா பூண்டு விற்பனை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.