கோவை: நாடு முழுவதும் போதை மாத்திரை சப்ளை செய்த மும்பை தாராவியை சேர்ந்த மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர்கள் 2 பேரை கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் தொடர்பில் உள்ள 80 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். கோவை கரும்புக்கடை, குனியமுத்தூர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு போதை மாத்திரை விற்பனை செய்த சிலரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் மும்பையில் இருந்து 2 பேர் போதை மாத்திரையை சப்ளை செய்தது தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் சில நாட்களுக்கு முன்பு மும்பைக்கு விரைந்தனர். மும்பை தாராவில் மெடிக்கல் ஸ்டோர் நடத்திய நிகில் விகாஷ் (29), அஜய் குமார் (28) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 340 போதை மாத்திரை மற்றும் ஒரு டைரி, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. டைரியை ஆய்வு செய்தபோது தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், சென்னை, மதுரை, திண்டுக்கல், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அவர்கள் போதை மாத்திரை சப்ளை செய்துள்ளனர்.
இவர்களிடம் தமிழ்நாட்டில் மட்டும் 80 வாடிக்கையாளர்கள் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை வாங்கி இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, காஷ்மீர் என பல மாநிலங்களுக்கும் இவற்றை விநியோகம் செய்து வந்துள்ளனர். டைரியில் தங்களது வாடிக்கையாளர் முகவரி, செல்போன் எண்களை குறித்து வைத்துள்ளனர். அதன்படி போதை மாத்திரை வாங்கிய 80 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
The post தமிழகம் முழுவதும் போதை மாத்திரை சப்ளை மும்பை மெடிக்கல் உரிமையாளர் 2 பேர் கைது; 80 பேருக்கு சம்மன் appeared first on Dinakaran.