×

தொழிற்சாலை மேலாளரை மிரட்ட கைத்துப்பாக்கியுடன் வந்த வடமாநில இளைஞர் கைது

காஞ்சிபுரம்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பல தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் பீகார், ஒரிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வட மாநில இளைஞர்கள் இரும்பு உருக்கு ஆலை, ஸ்டீல் தொழிற்சாலைகள், கெமிக்கல் தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர். அங்கு பழைய பிளாஸ்டிக் பொருட்களை அரைக்கும் தொழிற்சாலை ஒன்றில் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குறைந்த பணியாளர்களை கொண்டு வேலை செய்து வந்துள்ளனர்.

அப்போது, பீகாரை சேர்ந்த வடமாநில இளைஞர் சுனில்குமார் மாத்தோ(24) என்பவர் போர்க் லிப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இரவு பணிக்கு வந்துள்ளார்.அப்போது அதே தொழிற்சாலையில் மேலாளரான ஜெரீஸ்ஆனந்தை சுட்டுக் கொள்ளப் போவதாக, சுனில்குமார் பணியில் இருந்த ஸ்ரீதர் என்பவரிடம் கைத்துப்பாக்கியை காட்டியுள்ளார். அதற்கு ஸ்ரீதர் இதையெல்லாம் தொழிற்சாலைக்குள் கொண்டு வரக்கூடாது என கூறியுள்ளார். அதன்பின்பு சுனில்குமார் தன்னுடைய தந்தை உபேந்திரா மாத்தோவை(60) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதற்கிடையில், நிர்வாகம் சிப்காட் காவல் நிலையத்திற்கு மேற்கண்ட வாலிபர் ஒருவர் கைத்துப்பாக்கி வைத்துள்ளார் என தகவல் கூறியதை தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சுனில்குமாரை பிடிக்க சென்றுள்ளனர். ஆனால், சுனில்குமார் தொழிற்சாலைக்குள்ளே இருட்டான பகுதியில் மறைந்து கொண்டுவிட்டார். அதன் பின்பு ஒரு மணி நேரம் தேடி பின்புறமாக மறைந்திருந்த சுனில்குமாரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கண்ட தொழிற்சாலையின் மேலாளர் ஜெரீஸ்ஆனந்த் தொடர்ந்து வேலை நேரத்தில் தொந்தரவு கொடுத்துள்ளார் எனவும், அவரை மிரட்டுவதற்காக வீட்டில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை கொண்டு வந்தேன் எனவும், இந்த கைத்துப்பாக்கி ஒடிசா பகுதியில் ரூ.20,000 ரூபாய்க்கு வாங்கியதாகவும் கூறியுள்ளார்.

சுனில் குமார் மற்றும் அவருடைய தந்தை இருவரையும் போலீஸ் கஸ்டடியில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.அது மட்டுமல்லாமல் சிப்காட் போலீசார் கைது செய்யப்பட்டவர்கள் தங்கியுள்ள மா.பொ.நகர் பகுதியில் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு அருகே உள்ள வட மாநில இளைஞர் இருக்கும் குடியிருப்பு முழுவதும் துப்பாக்கி இருக்கிறதா எனவும் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், தொழிற்சாலையில் பணியாற்றும் பல வட மாநில இளைஞர்கள் துப்பாக்கி பயன்படுத்தி வருகிறார்களா எனவும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

The post தொழிற்சாலை மேலாளரை மிரட்ட கைத்துப்பாக்கியுடன் வந்த வடமாநில இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags :
× RELATED எம்ஜிஆர் நகரில் நள்ளிரவில் பரபரப்பு...