×

பாடி மாடிபிகேஷன் என்ற பெயரில் ‘டாட்டூ’ சென்டரில் நாக்கை இரண்டாக பிளந்து ஆபரேஷன்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் டிசைனர் உள்பட 2 பேர் கைது; கடைக்கு சீல்

திருச்சி: பாடி மாடிபிகேஷன் என்ற பெயரில் டாட்டூ சென்டரின் ஆபரேஷன் மூலம் நண்பரின் நாக்கை இரண்டாக பிளந்த டாட்டூ டிசைனர் உள்பட 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, டாட்டூ கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன்(25). இவர், மேல சிந்தாமணி பஜார் பகுதியில் ‘ஏலியன்’ என்ற பெயரில் டாட்டூ ஸ்டூடியோ (பச்சை குத்தும்) கடை கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடத்துகிறார்.

இந்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஹரிஹரன், வித்தியாசமாக தோன்ற வேண்டும் என்பதற்காக மராட்டிய மாநிலம் மும்பைக்கு சென்று சுமார் 2 லட்சம் வரை செலவு செய்து, தன் கண்களில் பச்சை குத்தி கொண்டுள்ளார். முக்கியமாக, அறுவை சிகிச்சை மூலம் நாக்கையும் இரண்டாக பிளந்து கொண்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்வது குறித்த பயிற்சியை அவர் மும்பையில் கற்றுக் கொண்டதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து திருச்சி வந்த ஹரிஹரன், திருவெறும்பூர் கூத்தைப்பார் வடக்கு தெருவை சேர்ந்த ஜெயராமன்(24) என்பவரை தனது டாட்டூ கடைக்கு அழைத்துள்ளார். தொடர்ந்து, டிச.9ம் தேதி ஹரிஹரன், அறுவை சிகிச்சை மூலம் ஜெயராமனின் நாக்கை இரண்டாக பிளந்தார். இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் ஹரிஹரன் வெளியிட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர் காமினிக்கு கோரிக்கை வைத்தனர்.
இதைதொடர்ந்து

ஸ்ரீரங்கம் பகுதி சுகாதாரத்துறை அதிகாரி கார்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், கோட்டை போலீசார், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்வது, மருந்து கட்டுப்பாட்டு விதிகளை மீறி அறுவை சிகிச்சை செய்வது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் ஜெயராமன் ஆகியோரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து ஹரிஹரனுக்கு சொந்தமான டாட்டூ கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது பற்றி போலீசார் கூறுகையில்,‘‘இவர்கள், ‘பாடி மாடிபிகேசன்’ என்ற பெயரில் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்று விசாரணை செய்து வருகிறோம். டாட்டூ என்ற பெயரில் ‘ஏலியன்’ தோற்றத்தை உருவாக்கி, இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும், இதுபோன்ற நபர்களிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,’’என்றனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,‘‘ மருத்துவம் படிக்காமல், அறுவை சிகிச்சை செய்வது சட்டப்படி குற்றம். அறுவை சிகிச்சை செய்து, நாக்கை இரண்டாக பிளப்பது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நாக்கு இரண்டாக பிளக்கப்பட்டால் சிறிது காலத்திற்கு பிறகு உச்சரிப்பில் தடுமாற்றம் ஏற்படும். இதே நிலை தொடர்ந்தால், வாய் பேச முடியாத நிலை ஏற்படும். முக்கியமாக, கண்களில் உள்ள ெவள்ளை திரைக்கும், மேல் பகுதியில் உள்ள கண்ணாடி திரைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஊசி மூலம் ‘டாட்டூ இங்க்’ செலுத்துவதால் ரசாயான மாற்றம் ஏற்பட்டு கண்களில் அலர்ஜி ஏற்படும். சுத்திகரிக்கப்பட்ட ஊசியை பயன்படுத்தாமல், சாதாராண ஊசிகளை பயன்படுத்தினால், கண்களின் பார்வை பறிபோக வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற விபரீதமான விஷயங்களில் ஈடுபடுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்,’’என்றனர்.

The post பாடி மாடிபிகேஷன் என்ற பெயரில் ‘டாட்டூ’ சென்டரில் நாக்கை இரண்டாக பிளந்து ஆபரேஷன்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் டிசைனர் உள்பட 2 பேர் கைது; கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை...