விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி 250 பேரிடம் ₹5.50 கோடி மோசடியில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வானூரை சேர்ந்த ஞானமணி என்பவர் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நடத்தி வரும் ஏலச்சீட்டில் சேர்ந்தார். பின்னர் அவர் மூலமாக நாங்களும் அந்த ஏலச்சீட்டில் சேர்ந்து 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மாதந்தோறும் தவறாமல் பணம் செலுத்தி வந்தோம்.
இந்த ஏலச்சீட்டில் நாங்கள் யாரும் ஏலம் எடுக்காத நிலையில் எவ்வித காரணமும் இன்றியும், எங்களிடம் எந்தவொரு தகவலையும் தெரிவிக்காமல் அந்த பெண்ணும், அவரது மகன்கள் 2 பேரும், மருமகள்கள் 2 பேரும் ஏலச்சீட்டை நிறுத்திவிட்டனர். அவர்களிடம் சென்று, நாங்கள் செலுத்திய ஏலச்சீட்டு பணத்தை திருப்பித்தரும்படி கேட்டபோதிலும் அவர்கள் தர மறுத்துவிட்டனர்.
அவர்கள் 5 பேரும் சேர்ந்து 250 பேரிடம் ₹5.50 கோடி வரை பணத்தை வசூலித்து அதனை திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர். எங்களிடம் ஏலச்சீட்டு தவணையாக வசூலித்த பணத்தை கொண்டு அவர்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். எனவே ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்த அவர்கள் 5 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஏலச்சீட்டு நடத்தி ரூ.5.50 கோடி மோசடி: விழுப்புரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.