×

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.7 கிலோ தங்கம் பறிமுதல்: விமான ஊழியர் உள்பட இருவர் பிடிபட்டனர்

மீனம்பாக்கம்: துபாயிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், பெரிய அளவில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாகவும் அந்த தங்கத்தை விமான ஊழியர் ஒருவரே எடுத்து வருவதாகவும் சுங்கச்சோதனை இல்லாமல் வெளியில் எடுத்துச் செல்ல கடத்தல் கும்பல் திட்டமிட்டுள்ளதாகவும் சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்து, கடத்தல் கும்பலை கூண்டோடு பிடித்து, தங்கத்தையும் பறிமுதல் செய்யும்படி அறிவுறுத்தினர்.

இதையடுத்து, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளின் தனிப்படையினர் நேற்று முன்தினம் அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் அதிகாலை 4.40 மணிக்கு, துபாயிலிருந்து வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. அதில், இறங்கி வந்த பயணிகளை சுங்க அதிகாரிகளின் தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்தனர். விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளும் இறங்கி வெளியில் வந்து விட்டனர். இதையடுத்து சுங்கத்துறையினர் விமானத்தின் கேபின் குரூ எனப்படும் விமான ஊழியர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்களில், 26 வயது ஆண் ஊழியர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, தனி அறையில் முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அந்த ஊழியர் அணிந்திருந்த பேண்ட் பெல்ட் அணியும் பகுதியில் 4 தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்த தங்க கட்டிகளின் மொத்த எடை 1.7 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.4 கோடி. இதை தொடர்ந்து, சுங்க அதிகாரிகள் ஏர் இந்தியா விமானத்தின் கேபின் குரூ ஊழியரை கைது செய்து, தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

அதோடு அவர் கைது செய்யப்பட்டுள்ள தகவலை ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கும் தெரியப்படுத்தினர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்தது. அப்போது அதே விமானத்தில் வந்த பயணி ஒருவர் இந்த தங்க கட்டிகளை விமானத்தில் வைத்து கேபின் குரூவிடம் கொடுத்தது தெரியவந்தது. எனவே, கேபின் குரூ கொடுத்த தகவலின்படி, குடியுரிமை சோதனை பிரிவில் நின்று கொண்டிருந்த அந்த கடத்தல் பயணியையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். அதன்பிறகு சுங்க அதிகாரிகள் தொடர்ந்து கடத்தல் பயணியையும், கடத்தலுக்கு துணை போன விமான கேபின் குரூவிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கேபின் குரூ, ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது. இதற்கு முன்பு இதேபோல் ஏதாவது கடத்தலில் துணை செய்துள்ளாரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை விமான நிலையத்தில், துபாயில் இருந்து வரும் விமானத்தில் விமான கேபின் குரூ ஒருவரே ரூ.1.4 கோடி மதிப்புடைய 1.7 கிலோ தங்கத்தை கடத்தி வந்து சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையிடம் சிக்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.7 கிலோ தங்கம் பறிமுதல்: விமான ஊழியர் உள்பட இருவர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.

Tags : Dubai ,Meenambakkam ,Air India ,Chennai ,Dinakaran ,
× RELATED கோழிக்கோடு – துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்!!