பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான நேற்று ஆஸி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன் குவித்தது. அதன் பின் ஆடிய இந்தியா 51 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து பரிதாப நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் 3வது டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா அரங்கில் கடந்த 14ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆஸி அணி 13.2 ஓவரில் 28 ரன் எடுத்தபோது கனமழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
2வது நாள் ஆட்டத்தின் இறுதியில் ஆஸி அணி, 7 விக்கெட் இழப்புக்கு 405 எடுத்திருந்தது. ஸ்மித், டிராவிஸ் ஹெட் சதம் விளாசினர். இந்நிலையில் நேற்று 3ம் நாள் ஆட்டம் தொடர்ந்தது. அணியின் ஸ்கோர் 423 ஆக உயர்ந்தபோது பும்ரா பந்து வீச்சில் பண்ட்டிடம் கேட்ச் தந்து மிட்செல் ஸ்டார்க் 18 ரன்னில் அவுட்டானார். அதன் பின் நாதன் லியோனை 2 ரன்னில் முகம்மது சிராஜும், கடைசி விக்கெட்டாக அலெக்ஸ் கேரியை 70 ரன்னுக்கு, ஆகாஷ் தீப்பும் வீழ்த்தினர். இதனால் ஆஸியின் இன்னிங்ஸ் 445 ரன்னுடன் முடிவுக்கு வந்தது. இந்த இன்னிங்சில் இந்திய பந்து வீச்சாளர் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தினார்.
சிராஜ் 2, ஆகாஷ் தீப், நிதிஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அதன் பின் இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடியது. துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் ஸ்டார்க் பந்தில் மார்ஷிடம் கேட்ச் தந்து அவுட்டானார். சுப்மன் கில், 1 ரன்னில் ஸ்டார்க்கிடமும், விராட் கோஹ்லி 3 ரன்னில் ஹேசல்வுட்டிடமும், ரிஷப் பண்ட் 9 ரன்னில் கம்மின்சிடமும் வீழ்ந்தனர். இதனால் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 51 ரன் எடுத்து பரிதாப நிலையில் இருந்தது. கே.எல்.ராகுல் 33, கேப்டன் ரோஹித் சர்மா 0 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 4ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
The post 3வது டெஸ்டின் 3வது நாளில் 51க்கு 4 விக்கெட் இழந்து இந்தியா திணறல்: ஆஸி 445 ரன் குவிப்பு appeared first on Dinakaran.