கொடைக்கானல்: கொடைக்கானல் – பெரியகுளம் மலைச்சாலையில் இன்று காலை மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. `மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.
தொடர் மழை காரணமாக கொடைக்கானல் மலைச்சாலையில் அவ்வப்போது மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. கொடைக்கானல் – அடுக்கம் – பெரியகுளம் மலைச்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலை துறையினர் சாலையை சீரமைத்தனர்.
இந்த நிலையில், கொடைக்கானல் – அடுக்கம் – பெரியகுளம் மலைச்சாலையில் இன்று காலை 2 இடங்களில் அடுத்தடுத்து மண்சரிவு ஏற்பட்டது. சாலையின் குறுக்கே மரம் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் அடுக்கம், பெருமாள்மலை, பாலமலை, தாமரைக்குளம், சாமக்காட்டு பள்ளம் உள்ளிட்ட மலைக்கிராமங்களை சேர்ந்த மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் தங்களது விவசாய நிலங்களில் இருந்து விளைபொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக கொடைக்கானல் அல்லது பெரியகுளம் செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர். சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மண் சரிவு, பாறைகளை அகற்றி சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
The post கொடைக்கானல்-பெரியகுளம் மலைச்சாலையில் மீண்டும் மண்சரிவு: வாகன போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.