×

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது: தமிழகத்தில் நாளை, மறுநாள் கனமழை, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும். நேற்று முன்தினம் லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கக் கூடும். இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

16ம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.19, 20ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

வரும் 17, 18ம் தேதிகளில் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்று தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

எங்கு எவ்வளவு?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடனா அணை (தென்காசி) 26 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. ஊத்து (திருநெல்வேலி) 23 செ.மீ, நாலுமுக்கு (திருநெல்வேலி) 22 செ.மீ, தூத்துக்குடி விமான நிலையம் 21 செ.மீ, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, 19 செ.மீ, மாஞ்சோலை 18 செ.மீ,

தூத்துக்குடி 16 செ.மீ, ராமநதி அணைப் பகுதி (தென்காசி), கோடியக்கரை (நாகப்பட்டினம்), பாபநாசம் (திருநெல்வேலி) தலா 15 செ.மீ, நீடாமங்கலம் (திருவாரூர்), செங்கோட்டை (தென்காசி), குண்டாறு அணை (தென்காசி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி) தலா 14 செ.மீ, ஒரத்தநாடு (தஞ்சாவூர்), விருதுநகர், குருங்குளம் (தஞ்சாவூர்) தலா 13 செ.மீ, காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 12 செ.மீ, புள்ளம்பாடி (திருச்சி), சாத்தூர், சாத்தான்குளம் (தூத்துக்குடி), சிவகாசி (விருதுநகர்), சாத்தான்குளம் தலா 11 செ.மீ, தேக்கடி, அருப்புக்கோட்டை, கல்லிக்குடி (மதுரை) தலா 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

The post தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது: தமிழகத்தில் நாளை, மறுநாள் கனமழை, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : southeast Bay of Bengal ,Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Department ,Dinakaran ,
× RELATED நடுக்கடலில் இயந்திர கோளாறு கடலில் சிக்கி தவித்த 4 மீனவர்கள் மீட்பு