×

சேலம் மாவட்டத்தில் 713 மில்லி மீட்டர் மழை: சாரல் மழையால் வெறிச்சோடிய சாலைகள்

சேலம்: தமிழகத்தில் பெஞ்சல் புயல் தாக்கத்திற்கு பிறகு மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழைப்பொழிவு குறைந்து காணப்பட்டது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது தென்மேற்கு வங்கங்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்று அதிகாலையில் இருந்தே சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று 2வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. சேலம் மாநகரை பொறுத்த வரை அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கிச்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மழை காரணமாக அலுவலக பணிக்கு செல்வோர், கல்லூரி மாணவ, மாணவிகள் குடை பிடித்தும், ரெயின் கோட் அணிந்தவாறும் சென்றனர். தொடர்மழை காரணமாக சாலைகளில் பயணிப்போர் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்து காணப்பட்டது.

குறிப்பாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் சேலம் கலெக்டர் அலுவலக சாலையில வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல் சேலம் ஆற்றோர காய்கறி மார்க்கெட், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளிலும் மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்): சேலம் 16 , ஏற்காடு 42, வாழப்பாடி 56, ஆணைமடுவு 58, ஆத்தூர் 67, கெங்கவல்லி 75, தம்மம்பட்டி 88, ஏத்தாப்பூர் 63, கரியகோவில் 55, வீரகனூர் 85, நத்தக்கரை 32, சங்ககிரி 15, இடைப்பாடி 15, மேட்டூர் 13, ஓமலூர் 14, டேனிஷ்பேட்டை 17 என மாவட்டம் முழுவதும் 713 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

The post சேலம் மாவட்டத்தில் 713 மில்லி மீட்டர் மழை: சாரல் மழையால் வெறிச்சோடிய சாலைகள் appeared first on Dinakaran.

Tags : Salem district ,Salem ,Storm Benjal ,Tamil Nadu ,southwest Bengal ,Dinakaran ,
× RELATED எஸ்.பி., அலுவலகத்தில் ஐஜி வருடாந்திர...