×

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக வலுவிழக்க வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் நிலை கொண்டுள்ளது. சென்னைக்கு 450 கி.மீ தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்கிறது. அடுத்த 12 மணி நேரத்திற்கு பிறகு படிப்படியாக கடலிலேயே வலுவிழக்கும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். மேலும் 26ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மத்தியமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஆந்திர – தெற்கு ஒரிசா கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்மேற்கு- மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bay of Bengal ,Meteorological Department ,Chennai ,west-central Bay of Bengal ,Dinakaran ,
× RELATED வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது