×

கொடிவேரி அணையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்

*உடை மாற்றும் அறை: பேருந்து வசதி: பார்க்கிங் வசதி தேவை

கோபி : ஈரோடு மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக கொடிவேரி அணை உள்ளது. சுமார் 700 ஆண்டுக்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை இதுவாகும்.
ஆண்டு முழுவதும் அணையின் மேல் பகுதியில் இருந்து கொட்டும் தண்ணீர் அருவி போல் கொட்டும்.

சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழுவதால், பெண்கள்,குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும். இதனால் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,கர்நாடகா மாநிலம் மைசூர்,பெங்களூரில் இருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.

கொடிவேரி அணையின் கரையில் கடந்த 10 ஆண்டுக்கு முன் ஓய்வறை,உடைமாற்றும் அறை கட்டப்பட்டது. ஓய்வறை கட்டப்பட்ட சில மாதங்களில் கன மழையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட மணல் பெரும் பகுதியை மூடியது.

இதனால் ஓய்வறையை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் உடை மாற்ற பெண்களுக்கு புதிய அறைகள் கட்ட வேண்டும். குடும்பத்துடன் வருபவர்கள் அணையில் குளிக்கும் போது உடைமைகளை பாதுகாக்க முதியவர்கள், பெண்கள்,குழந்தைகள் மணற்பரப்பில் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இவர்களுக்கு ஓய்வறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.

அதே போன்று இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதையே பெரிதும் விரும்புகின்றனர். இதற்காக 15க்கும் மேற்பட்ட பரிசல்கள் கொடிவேரி அணையில் உள்ளது. ஆனால் பரிசல் துறையில் இதுவரை எவ்வித அடிப்படை கட்டமைப்புகளும் செய்யப்படாத நிலையில், பரிசலில் ஏறும் போதும், இறங்கும் போதும் தடுமாறி கீழே விழும் அபாயமும் உள்ளது. இதனால் பரிசல் துறையில் முழுமையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

அதே போன்று கோபி சத்தி சாலையில் கொடிவேரி பிரிவில் இருந்து 2 கி.மீ தூரத்திலும் சத்தி அந்தியூர் சாலையில் இருந்து சுமார் 4 கி.மீ தூரத்திலும் கொடிவேரி அணை அமைந்துள்ளது.
இந்த அணைக்கு பேருந்து வசதியே இல்லை.

சுற்றுலா பயணிகள் பைக், கார், வேன், பேருந்து வாகனங்களில் மட்டுமே வர முடியும். மேலும் அணை பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பார்க்கிங் பகுதியில் சுமார் 30 வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடியும் என்ற நிலையில் மற்ற வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுகிறது.

இதனால் விடுமுறை தினங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அணை பகுதியில் வாகனங்கள் நிறுத்த முடியாத நிலையில், கோபி சத்தி சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் 2 கி.மீ தூரம் நடந்தே அணைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அணைக்கு தனியாக பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் சிங்கிரிபாளையத்தில் இருந்தும் கொடிவேரி அணைக்கு செல்ல சாலை வசதி உள்ளது. பண்டிகை காலங்களில் மாற்றுப்பாதையில் போக்குவரத்தை மாற்றி அமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்.

மேலும் கொடிவேரி பிரிவில் இருந்து அணை வரை பொதுப்பணித்துறை சார்பில் பேட்டரி வாகனங்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அதே போன்று அணையின் கீழ் பகுதியில் பாதுகாப்பாக குளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதுடன் தண்ணீர் கொட்டும் பகுதியில் இருந்து பாலம் வரை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை களை அகற்றுவதுடன், அங்கும் குளிப்பதற்கு உண்டான வசதிகளை செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொடிவேரி அணையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kodiveri Dam ,Gopi ,Erode district ,Bhavani river ,Dinakaran ,
× RELATED கோபி அருகே பெட்ரோல் பங்க்கில்...