தா.பழூர், டிச. 13: அரியலூர் மாவட்டம் தா.பழூர் காலனித்தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் வானிலை ஆராய்ச்சி மையம் அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யுமென அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. அவ்வப்போது கனமழை காற்றுடன் பெய்தது. மாவட்ட நிர்வாகம் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் காலை சுமார் 10 மணி அளவில் சுமார் அரை மணிநேரம் பெய்த பலத்த மழை காரணமாக கிராமங்களில் உள்ள வீதிகள் தோறும் மழை நீர் ஆனது ஆறுகள் போல பெருக்கெடுத்து ஓடியது. தா.பழூர் காலனியில் உள்ள இரு பகுதியில் உள்ள தெருக்களின் இரு புறமும் உள்ள வடிகாலில் எந்த தெரு சாலையும் இணைக்கவில்லை.
இதனால் தெருக்களில் உள்ள மழைநீர் வெளியேற வழி இல்லாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தற்போது பெய்த சில மணி நேரம் மழைக்கே இந்த நிலை என்றால் பல மணி நேரம் மழை பொழியும் பட்சத்தில் குடியிருப்பு வீடுகளுக்குள் மழைநீர் புகும் நிலை ஏற்படும். ஆகையால் தெருக்களில் முறையாக வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post தா.பழூர் காலனியில் வடிகால் இல்லாததால் தேங்கி நிற்கும் மழைநீர் appeared first on Dinakaran.