×

குதிரை வாகனத்தில் அண்ணாமலையார் பவனி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா 8ம் நாள் உற்சவம்

திருவண்ணாமலை, டிச.12: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் 8ம் நாளான நேற்று குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும், பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. அதன்படி, கடந்த 9ம் தேதி வெள்ளித் தேரோட்டமும், நேற்று முன்தினம் மகா தேரோட்டமும் நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு தொடங்கிய பஞ்சரதங்கள் பவனி நள்ளிரவு வரை நடந்தது. பின்னர், தேரோட்டத்தின் நிறைவாக திரிபுர தகனம் நிகழ்வும், தேருக்கு எதிரில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சந்திரசேகரர் அருள்பாலித்தல் நிகழ்வும் நேற்று காலை நடந்தது.

தொடர்ந்து, விழாவின் 8ம் நாள் உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. காலை உற்சவத்தை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட விநாயகர், சந்திரசேகரர், 3ம் பிரகாரத்தை வலம் வந்து, திட்டி வாசல் வழியாக ராஜகோபுரம் எதிரில் காலை 11 மணி அளவில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து, குதிரை வாகனத்தில் விநாயகரும், குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விட்டு விட்டு பெய்த லேசான மழையையும் பொருட்படுத்தாமல், சுவாமி திருவீதியுலாவை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் மாடவீதியில் திரண்டிருந்தனர்.

பின்னர், இரவு 10 மணியளவில் 8ம் நாள் இரவு உற்சவம் விமரிசையாக தொடங்கியது. அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் ராஜகோபுரம் எதிரில் எழுந்தருளினர். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என முழக்கமிட்டனர். அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனங்களில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், குதிரை வாகனங்களில் பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் மாடவீதியில் பவனி வந்தனர். நள்ளிரவு வரை வீதியுலா நடந்தது. நள்ளிரவு வரை நடந்த சுவாமி திருவீதியுலாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு கோயில் கலையரங்கத்தில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம், தெருக்கூத்து நாடகம், வில்லுப்பாட்டு, திரையிசை குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

The post குதிரை வாகனத்தில் அண்ணாமலையார் பவனி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா 8ம் நாள் உற்சவம் appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar ,Karthigai Deepathi festival ,Tiruvannamalai ,Chandrasekhara ,Amman Sametha Annamalaiyar ,Tiruvannamalai Annamalaiyar ,
× RELATED மலை மீது தீபமாக காட்சி தரும்...