×

சாத்தனூர் அணையில் அதிகாரிகள் ஆய்வு 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

தண்டராம்பட்டு, டிச.16: சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், அங்கு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி, அணைக்கு கடந்த 2ம் தேதி 1,68,000 கனஅடி நீர்வரத்து ஏற்பட்டது. நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில் 116 அடியாக உயர்ந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி 1,68,000 கனஅடி நீரும் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. மேலும், ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தொடர்ந்து, அணையின் நீர்வரத்துக்கு ஏற்ப தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் மன்மதன் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சமீபத்தில் அதிகபட்சமாக 1,68,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில் அணையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது செயற்பொறியாளர் அறிவழகன், உதவி செயற்பொறியாளர் ராஜாராம், உதவி பொறியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post சாத்தனூர் அணையில் அதிகாரிகள் ஆய்வு 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Sathanur dam ,Thandarampattu ,Krishnagiri ,KRP dam ,Tiruvannamalai district… ,Dinakaran ,
× RELATED பாலாறு தென்பெண்ணை இணைப்பு திட்டம் விரைவுபடுத்தப்படுமா?