×

அபராத தொகை கட்டாததால் விடுதலையான மீனவர்கள் மீண்டும் சிறையிலடைப்பு: விலங்குகள்போல் நடத்துவதாக புகார்

ராமேஸ்வரம்: அபராத தொகை கட்டாததால், விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து டிச.4ம் தேதி கடலுக்கு சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தது. டிச.19ம் தேதி தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 14 பேரும் அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டனர். அபராத தொகை செலுத்த தாமதமானதால், மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படாமல், மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து விடுதலையான மீனவர் பேட்ரிக் நாதன், மீனவர் சங்க பிரதிநிதி கார்ல் மார்க்ஸை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அதில், ‘‘இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விடுதலையான மீனவர்களை மீட்க எந்த துரித நடவடிக்கையும் எடுக்காததால், மீண்டும் எங்களை சிறைக்கு அழைத்து சென்றனர். சிறையில் உள்ள இலங்கை அதிகாரிகள் எங்களை தகாத வார்த்தையில் பேசி விலங்குகளை போல நடத்துகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டிற்கு வந்து விடுவோம் என குடும்பத்தினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால், இங்குள்ள அதிகாரிகள் எங்களை அலட்சியப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். எனவே இந்திய அரசு தூதரக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து விடுதலையான மீனவர்களை தாயகம் அனுப்பி வைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

The post அபராத தொகை கட்டாததால் விடுதலையான மீனவர்கள் மீண்டும் சிறையிலடைப்பு: விலங்குகள்போல் நடத்துவதாக புகார் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lankan Navy ,Vavuniya ,Thalaimannar… ,
× RELATED 14 மீனவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்