×

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க கனிமவள நிலங்கள் மீது வரி விதிக்க முடிவு: சட்டமசோதா நிறைவேற்றம்

சென்னை: தமிழ்நாடு கனிமங்களை கொண்டுள்ள நில வரிச் சட்டம் என்ற சட்டத்தை இயற்றுவதற்கான சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: மாநிலத்தின் வருவாயை அதிகரிப்பதற்காக, கனிம வளம் கொண்ட நிலங்கள் மீது வரி விதிப்பதற்கான சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சட்டப்படி பழுப்பு கரி, சுண்ணாம்புக்கல், காரீயம் உள்ளிட்ட 13 வகை கனிமங்களை பெரிய வகை கனிமங்கள் என்றும் கரட்டுக்கல், சரளை மண், வண்ண மற்றும் கருப்பு கருங்கல், கூழாங்கல், மணல், படிகக் கல், உருட்டு களி மண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 வகை கனிமங்கள் சிறிய வகை கனிமங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பெரிய கனிமங்களுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரி நிர்ணயிக்கப்படுகிறது. சிறு கனிமங்களுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரை வரி நிர்ணயிக்கப்படுகிறது. நிலத்தில் உள்ள கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கு முறையே ஒரு டன்னுக்கு ரூ.8,500 மற்றும் ஒரு கன மீட்டருக்கு ரூ.3.50 என வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதுபோன்ற நிலங்களின் உடமையாளர்கள் யார் யார் என்றால், நிலத்திற்கான ஒருங்கிணைந்த உரிமம் அல்லது நில ஆய்வு உரிமம் அல்லது கனிம ஆய்வு உரிமம் அல்லது சுரங்க குத்தகை அல்லது கல் சுரங்க குத்தகையின் உரிமையாளர் அல்லது கனிமங்களை கொண்டுள்ள நிலம் தொடர்பாக வழங்கப்பட்ட பிற கனிமத்திற்கு சலுகை வழங்கப்பட்டவர் என்று நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக தரப்பில் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

The post உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க கனிமவள நிலங்கள் மீது வரி விதிக்க முடிவு: சட்டமசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,CHENNAI ,Water Resources Minister ,Duraimurugan ,Assembly ,Dinakaran ,
× RELATED வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக...