திருவாரூர்: விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை ரயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். மாநில தலைவர் திருப்பதி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பாலு முன்னிலை வகித்தனர். அப்போது திருச்சியில் இருந்து காரைக்கால் செல்லும் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகளை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். திருவாரூரில் இன்று காலை வந்த எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிப்பதாக மாவட்ட தலைவர் சுப்பையன் தலைமையில் விவசாயிகள் திரண்டிருந்தனர். முன்னதாக போலீசார் பேரிகார்டுகளில் தடுப்பு ஏற்படுத்தி விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக இன்று காலை 9 மணிக்கே விவசாயிகள் திரண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விவசாயிகளை தடுத்து நிறுத்தினர்.
திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு லாபகரமான விலையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள், பெரும் கம்பெனிகளின் கடன்களை ரத்து செய்யும் ஒன்றிய அரசு, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முன்வராதது ஏன் என கேள்வி எழுப்பி முழக்கமிட்டனர். ஒருமணி நேரத்த்திற்கு மேலாக போராட்டம் தொடந்த நிலையில், விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
மதுரை ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ என்ற விவசாய அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக சென்ற ஏராளமான விவசாயிகளை போலீசார் இன்று காலை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சேலம் ஜங்ஷன் ரயில்நிலைய நுழைவு வாயில் முன் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில தலைவர் தங்கராஜ் தலைமை வகித்து ஒன்றிய அரசை கண்டித்து பேசினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்கனை எழுப்பினர்.
திருப்பூரில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் ஏராளமான விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி ரயில் நிலைய நுழைவு வாயிலில் தடுப்புகள் அமைத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
The post ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தமிழக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்: விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தேவை appeared first on Dinakaran.