×

துணை கலெக்டர், துணை காவல் கண்காணிப்பாளர் பதவி குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது: தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு

சென்னை: துணை கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 90 பதவிகளுக்கான குரூப் 1 மெயின் தேர்வு இன்று காலை தொடங்கியது. சென்னையில் மட்டும் நடைபெறும் தேர்வை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர் 16 இடம், போலீஸ் டிஎஸ்பி-23, வணிகவரித் துறை உதவி ஆணையர்-14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1 பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 28ம் தேதி வெளியிட்டது.‌ இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் ஏதாவது இளங்கலை படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியரிங், டாக்டர் என்று பட்டப்படிப்பு படித்தவர்கள் என போட்டி போட்டு விண்ணப்பித்தனர். இதில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 973 பேர் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல்நிலை கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி நடந்தது. கடந்த செப்டம்பர் 2ம் தேதி ரிசல்ட் வெளியிட்டது. இதில் முதன்மை தேர்வுக்கு1988 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் 1888 பேர் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். 1232 பேர் ஆண்கள், பெண்கள் 655 பேர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் அடங்குவர். இந்நிலையில் மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. சென்னையில் மட்டும் 19 தேர்வு கூடங்களில் தேர்வு நடந்தது. தேர்வு கூடத்திற்கு ஒருவர் வீதம் 19 தலைமை கண்காணிப்பாளர் கண்காணித்தனர். மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மையங்களில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டிருந்தது. தேர்வர்கள் தவிர வேறு யாரும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

முறைகளை தடுக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் , டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேர்வு நடக்கும் மையங்களில் கண்காணிப்பு பணியில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகரன் ஈடுபட்டார். இன்று 2ம் தாள் தேர்வு பொது அறிவும், நாளை 3ம் தாள் தேர்வும், 13ம் தேதி 4ம் தாள் தேர்வும் நடக்கிறது. தேர்வு நடந்த மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

The post துணை கலெக்டர், துணை காவல் கண்காணிப்பாளர் பதவி குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது: தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Group 1 ,TNPSC ,CHENNAI ,Tamil Nadu Public Service Commission ,Dinakaran ,
× RELATED தேர்வுக்கு சம்பந்தமில்லாத...