×

தொடர் மழை காரணமாக திருவண்ணாமலைக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குறைந்த அளவே வந்த பயணிகள்

கூடுவாஞ்சேரி: கார்த்திகை மாத தீப திருநாளை முன்னிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 600 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், மழையின் காரணமாக பக்தர்களின் வருகை குறைந்துள்ளது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் உள்ளது. இங்கிருந்து தென் மற்றும் வட மாவட்டங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கார்த்திகை மாத தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை உச்சியில் இன்று மாலை 6 மணி அளவில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனால், பக்தர்களின் வருகை அதிகரிக்க கூடும் என்பதால் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று முன்தினம் மாலை முதல் 600 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நேற்று காலை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் எந்தெந்த பேருந்துகள் புறப்படும் என்பதை அறிவித்து வருகின்றனர்.

இதற்காக, பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பஸ் நிலையத்துக்கு வரும் பக்தர்களை கூவி கூவி அழைக்கின்றனர். இதனால், பேருந்துகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைந்த அளவே பயணிகள் வருவதாலும், பக்தர்களின் வருகை குறைந்து இருப்பதாலும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஒரு மணி நேரமாக காத்திருந்த பயணிகள்
கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 600 பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆனால், போளூர், வந்தவாசி பகுதிகளுக்கு சரிவர பேருந்துகள் இயக்கப்படாததால் பஸ் பயணிகள் ஒரு மணி நேரமாக காத்திருந்தனர். இதில், சாலையிலேயே குவிந்து காத்திருந்த பயணிகள் ஒரு மணி நேரம் கழித்து வந்த பேருந்துகளில் ஓடி சென்று ஏறினர். இதுகுறித்து, பஸ் பயணிகள் கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எந்தெந்த பேருந்துகள் எந்தெந்த வழிதடத்தில் இயக்கப்படுகிறது என்று பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் பெயர் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆனால் அந்த இடத்தில் பேருந்துகளை நிறுத்தாமல் சம்பந்தமே இல்லாத இடத்தில் மாறி மாறி பேருந்துகளை நிறுத்தி வைக்கின்றனர். இதனால், பேருந்துகளை தேடி அலைந்து திரிய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

The post தொடர் மழை காரணமாக திருவண்ணாமலைக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குறைந்த அளவே வந்த பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Klampakkam bus station ,Tiruvannamalai ,Mudravancheri ,Kalimbakkam bus station ,Karthigai ,Deepa Thiruvananthera ,Vandalur ,Glamorgan ,Dinakaran ,
× RELATED முடிச்சூரில் ரூ.42.70 கோடி மதிப்பீட்டில்...