×

தாராபுரம் ஆர்டிஓ உத்தரவு மீறல்; தீவன லாரியை சிறைபிடித்து கோழிப்பண்ணை முற்றுகை

தாராபுரம், டிச.8:தாராபுரம் அடுத்த மானூர் பாளையம் அருகே உள்ளது கருப்பட்டிபாளையம் கிராமம். இங்குள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு 1800 முட்டை கோழிகளை மட்டும் வளர்க்க வேண்டும் என்ற விதிமுறை உத்தரவு அமலில் இருக்க, கூடுதலாக ஐந்தாயிரம் கோழிகளுக்கு மேல் வளர்க்கும் விதத்தில் கோழிப்பண்ணையை விரிவுபடுத்தும் செயலில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த கிராம மக்கள் கோழிப்பண்ணையால் பொதுமக்களுக்கும் சுற்று வட்டார கிராமங்களுக்கும் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி திருப்பூர் கலெக்டர் மற்றும் தாராபுரம் கோட்டாட்சியருக்கு புகார் மனு அனுப்பினர். இந்நிலையில், மேலும் 5 ஆயிரம் கோழிகளை பண்ணைக்குள் கொண்டு வர முயற்சி நடந்ததால் இது பற்றிய கிராம மக்களின் புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்க கோரி தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர், அலுவலகத்தில் போராட்டம் நடத்த தயாரான கிராம மக்களிடம் கடந்த நவம்பர் 19ம் தேதி முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு முறையான அனுமதி பெற்ற பின்பு கூடுதல் முட்டை கோழிகளை பண்ணைக்குள் கொண்டு வர வேண்டும். அதுவரை பண்ணையில் எந்த ஒரு மாற்றமும் செய்யக்கூடாது என பேச்சுவார்த்தையில் எழுத்துப்பூர்வமான முடிவு எட்டப்பட்டது. இந்நிலையில், நேற்று கோட்டாட்சியரின் உத்தரவையின் மீறி கூடுதல் முட்டை கோழிகளையும் அதற்கான தீவன மூட்டைகளையும் ஏற்றுக் கொண்ட இரண்டு லாரிகள் கிராமத்துக்குள் வந்து கோழிப்பண்ணைக்குள் சென்றது. இதில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் தீவனம் ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்தனர்.

தகவலறிந்த தாராபுரம் தாசில்தார் திரவியம், மற்றும் குண்டடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். காலை 9 மணி முதல் மாலை 6.30 மணியை கடந்துமே ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் கிராம மக்கள் பண்ணையின் முன் கோழி தீவன லாரியை சிறை பிடித்தவாறு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுனர். வரும் 12ம் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

The post தாராபுரம் ஆர்டிஓ உத்தரவு மீறல்; தீவன லாரியை சிறைபிடித்து கோழிப்பண்ணை முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Tharapuram ,Karupatipalayam ,Dinakaran ,
× RELATED ‘எனக்கு சமமாக சேரில் அமர்ந்து டீ...