தொண்டி: தொண்டி அருகே, மீனவக் கிராமத்தில் விசைப்படகுகளுக்கு ட்ரான்ஸ்பான்டர் கருவி பொருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. இதனால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எளிதாக தகவல் தொடர்புகளை பரிமாறிக் கொள்ள, மீன்பிடி விசைப்படகுகளுக்கு பொருத்த, மேம்படுத்தப்பட்ட டிரான்ஸ்பாண்டர் கருவிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ உருவாக்கி உள்ளது. இதன் மூலம் நிலப்பரப்பிலிருந்து படகுகளுடன் இருவழி செய்தி பரிமாற்றம் மேற்கொள்ளலாம். புளூடூத் வாயிலாகவும் இணைத்து அலைபேசி செயலி மூலமாகவும், தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.
மேலும் டிரான்ஸ்பாண்டர்களை மீன்பிடி விசைப்படகில் பொருத்துவதால், மீன்பிடி படகுகள் புயல், சூறாவளி மற்றும் பெருமழை போன்ற ஆபத்தில் இருக்கும்போது ஆழ்கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும் மற்றும் மீன்வளத்துறை மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர செய்தி அனுப்பலாம். அதேபோல் கரையில் உள்ள மீன்வளத்துறை, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகு உரிமையாளர்கள் அவசர செய்தியை பெறவோ, பகிரவோ முடியும். அதுமட்டுமல்லாமல், அதிக மீன் கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரம் ஆகியவற்றை குறித்தும் படகிற்கு செய்தி அனுப்ப இயலும்.
ஆழ்கடலில் படகு நிலைகொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்து ஆபத்து காலங்களில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். தொண்டி அருகே லாஞ்சியடி மீனவ கிராமத்தில் முதன்முறையாக விசைப்படகுகளில் டிரான்ஸ்பான்டர் கருவி பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இதனால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post எளிதாக தகவல்களை பரிமாறிக் கொள்ள விசைப்படகுகளுக்கு ‘டிரான்ஸ்பான்டர்’ கருவி: தொண்டி அருகே மீனவர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.