- மத்தியப் பிரதேசம்
- ஆத்திரம்
- சத்தர்பூர்
- மத்திய பிரதேச அரசு பள்ளி
- எஸ்.கே.சக்சேனா
- தமோரா, சத்தர்பூர் மாவட்டம், மத்தியப் பிரதேசம்
- மத்திய பிரதேச அரசு
சத்தர்பூர்: மத்திய பிரதேச அரசுப்பள்ளியில் நன்றாக படிக்காததை கண்டித்ததால் தலைமையாசிரியரை சுட்டுக் கொன்ற மாணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் தமோராவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.கே.சக்சேனா (55) என்பவரின் உடல், பள்ளியின் கழிவறையில் கிடந்தது. சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது உடலை பார்த்து ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தலைமையாசிரியர் எஸ்.கே.சக்சேனாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் எஸ்பி அகம் ஜெயின் கூறுகையில், ‘பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.கே.சக்சேனாவை இரண்டு மாணவர்கள் சேர்ந்து துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இரண்டு மாணவர்களான சதம் யாதவ் மற்றும் அவரது கூட்டாளி மணீஷ் யாதவ் ஆகியோர் கொலை குற்றத்தை செய்தது தெரியவந்தது.
சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குள், மஹோபா பகுதியில் பதுங்கியிருந்த இரண்டு மாணவர்களையும் கைது செய்தோம். மாணவர் சதம் யாதவ் நன்றாக படிக்கவில்லை என்பது குறித்து, அவரது தந்தையிடம் புகார் கூறுவதாக தலைமையாசிரியர் கூறியுள்ளார். அதனால் ஆவேசமடைந்த அந்த மாணவர், தலைமையாசிரியரின் அறைக்கு சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார். அங்கிருந்த டேபிள், சேர்களை உடைத்துள்ளார். தலைமையாசிரியரின் அறையில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், மாணவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். தனது நண்பரான மணீஷ் யாதவ் துணையுடன், பள்ளியின் கழிவறைக்கு சென்ற தலைமையாசிரியர் எஸ்.கே.சக்சேனாவை இருவரும் பின்தொடர்ந்து சென்றனர்.
அப்போது தனது கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால், தலைமையாசிரியர் எஸ்.கே.சக்சேனாவை மாணவர் சதம் யாதவ் சுட்டுக் கொன்றார். சம்பவ இடத்திலேயே தலைமையாசிரியர் ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். நன்றாக படிக்காத மாணவரை தலைமையாசிரியர் கண்டித்ததால், அவரை சம்பந்தப்பட்ட மாணவரே சுட்டுக் கொன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post மத்திய பிரதேச அரசுப்பள்ளியில் தலைமையாசிரியரை சுட்டுக் கொன்ற மாணவர்: நன்றாக படிக்காததை கண்டித்ததால் ஆத்திரம் appeared first on Dinakaran.