டெல்லி: மகா கும்பமேளாவின்போது இலவச பயணம் என்ற தவறான செய்திகளுக்கு இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றான மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா திருவிழா, 2025 ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 அன்று முடிவடைகிறது. இந்த திருவிழா மிக பிரமாண்டமாக நடத்துவதற்கு ரூ.40 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் இருந்து சுமாா் 45 கோடி பக்தா்கள் இந்நிகழ்வில் பங்கேற்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதற்கான பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பக்தா்களுக்கான பல்வேறு வசதிகளை ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு சுமாா் 10,000 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் மகா கும்பமேளா திருவிழாவில் பங்கேற்கச்செல்லும் பக்தர்கள், இலவசமாக, ரயிலில் பயணிக்கலாம் என்ற தகவல் சமூக வலைதளத்தில் பரவியது.
இந்நிலையில், மகா கும்பமேளாவின்போது இலவச பயணம் என்ற தவறான செய்திகளுக்கு இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மகா கும்பமேளாவின்போது பயணிகள் ரயிலில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தவறான தகவல் பரவி வருகிறது. இந்த செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை; அது மக்களை தவறாக வழிநடத்துபவை. மகா கும்பமேளா அல்லது வேறு எந்த நிகழ்ச்சிகளின்போதும் இலவச பயணத்திற்கு எந்த ஏற்பாடுகளும் இல்லை. மகா கும்பமேளாவின்போது பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை உறுதி செய்ய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
The post மகா கும்பமேளாவின்போது இலவச பயணமா?: மறுப்பு தெரிவித்து இந்திய ரயில்வே விளக்கம்!! appeared first on Dinakaran.