×

டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு: பலர் படுகாயம்; போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

ஷம்பு: வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை பஞ்சாப் – அரியானா எல்லையில் உள்ள ஷம்பு என்ற இடத்தில் இருந்து விவசாயிகள் நேற்று தொடங்கினர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றனர். டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி இந்தப் பேரணி செல்லும் என அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இவர்களை தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அரியானாவின் அம்பாலா மாவட்டத்தில் 5 பேருக்கு மேல் கூட்டம் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும், சாலையின் குறுக்கே காங்கிரீட் தடுப்புகளை அமைத்தும், முள்வேலிகளை அமைத்தும் வாகனங்கள் செல்ல முடியாதவாறு சாலையை மறித்தனர். எனினும், விவசாயிகள் கைகளில் கொடிகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிக்கொண்டு பேரணியை தொடங்கினர். அவர்களை மேற்கொண்டு செல்ல வேண்டாம் என்று போலீசார் தடுத்தனர்.

இருப்பினும் போலீஸ் தடையை மீறி விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலை 44ல் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள், சில மீட்டர் தொலைவில் பாதையில் போலீசாரால் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியை அகற்றினர். இதனையடுத்து போலீசார் அமைத்திருந்த காங்கிரீட் தடுப்பு அருகே வந்தபோது, அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போலீசார் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
இதனால் அந்த இடமே போர்க்களம் போல் ஆனது. இதையடுத்து, விவசாயிகள் பலரும் சிதறி ஓடினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, ஷம்பு எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் சர்வான் சிங் பந்தர், ‘நாங்கள் டெல்லி நோக்கி செல்ல முடியாதவாறு போலீசார் தடுக்கின்றனர். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதில் விவசாய சங்கத் தலைவர்கள் 6 பேர் காயமடைந்துள்ளனர். எனவே, நாங்கள் எங்கள் பேரணியை நிறுத்தி வைத்துள்ளோம்’என தெரிவித்தார். இதனர் டெல்லி அருகே ஷம்பு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

* ராகுல் கண்டனம்
விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்குக் கண்டனம் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை தொடர்பான சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

* அனைத்து விளைபொருட்களும் குறைந்தபட்ச ஆதரவு விலை
பிரதமர் மோடி அரசு அனைத்து விவசாய விளைபொருட்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் என்று விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலங்களவையில் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ விவசாயிகளின் அனைத்து விளைபொருட்களும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்கப்படும் என்பதை அவைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

இது மோடி அரசு. மோடியின் உத்தரவாதத்தை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் இது. தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் நண்பர்கள் ஆட்சியில் இருந்தபோது, ​​எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை ஏற்க முடியாது என கூறியதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். குறிப்பாக விளைபொருட்களின் உற்பத்தி விலையை விட 50% கூடுதலாக வழங்க முடியாது என அவர்கள் கூறியதன் பதிவு என்னிடம் உள்ளது’ என்றார்.

The post டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு: பலர் படுகாயம்; போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Shambu ,Punjab-Aryana ,Samyukta Kisan… ,Dinakaran ,
× RELATED டெல்லி நோக்கி பேரணி போராட்டம் ஷம்பு...