- விழுப்புரம்
- கல்லாக்கிரிச்சி மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பென்ஜால்
- கடலூர்
- கள்ளக்குறிச்சி
- கிருஷ்ணகிரி
- திருவண்ணாமலை
விழுப்புரம்: தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த 26ம் தேதி முதல் வீசத்தொடங்கிய பெஞ்சல் புயலால் 30ம்தேதி வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. படிப்படியாக ெவள்ள நீர்வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. புயல், வெள்ள மீட்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டு துரிதப்படுத்தி சென்றனர்.
மேலும் 3 அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு புயல், வெள்ள மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். குடியிருப்புகளில் 2 நாள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல் கால்நடை, கோழிகள், சேதமடைந்த பயிர்களுக்கும் கணக்கெடுப்பு நடத்தி நிவாரண நிதி அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதியுதவித்தொகை வழங்கும் பணி தொடங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் அமைச்சர் பொன்முடி நிவாரண நிதியை வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளிலும் பெஞ்சல் புயல் நிவாரணம் வழங்கும் பணிகள் தொடங்கி உள்ளது.
இதற்காக வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இன்று (6ம்தேதி) முதல் புயல் நிவாரண உதவித்தொகைக்கான டோக்கன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. புயலின்போது விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர் சக்திவேல் உள்ளிட்ட 12 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் அறிவித்த ரூ.5 லட்சம் நிவாரண நிதியை அவர்களது குடும்பத்தினர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு அதற்கான காசோலையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
இந்நிகழ்வின்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலாளர் அமுதா, மாவட்ட ஆட்சியர் பழனி, எஸ்பி தீபக் சிவாஜ் ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் அமுதா கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் புயல் மற்றும் தென்பெண்ணையாறு வெள்ளப்பெருக்கு காரணத்தினால் பெரும்பாலான பகுதிகள் பாதிப்படைந்துள்ளது.
தமிழ்நாடு முதல்வர் 2 நாட்களுக்கு முன்னதாகவே விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்து இப்பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி சென்றார். பெஞ்சல் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள், குடிநீர், பால்பவுடர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மற்ற மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய நிவாரணப் பொருட்கள் அனைத்தும் தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை மின்இணைப்புகள் 7 பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் பணி துவங்கியது: வீடு, வீடாக சென்று டோக்கன், உயிரிழந்த 12 பேர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் appeared first on Dinakaran.